தனியாக இருப்பதே பிடித்திருக்கிறது, அப்படியே இருக்க நினைக்கிறேன்: ஹாலே பெர்ரி

தனியாக இருப்பதே பிடித்திருக்கிறது, அப்படியே இருக்க நினைக்கிறேன்: ஹாலே பெர்ரி
Updated on
1 min read

தனக்குத் தனிமையும், தனது சுயத்தின் துணையுமே நன்றாக இருக்கிறது என்றும், இப்படியே இருந்துவிடுவேன் என்ற நினைப்பதாகவும் நடிகை ஹாலே பெர்ரி கூறியுள்ளார்.

2000-களில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகை ஹாலே பெர்ரி. இன்று வரை இவருக்கான ரசிகர் கூட்டம் உலகம் முழுவதும் உள்ளது. ஹாலே பெர்ரி இதுவரை மூன்று முறை திருமணம் செய்துள்ளார். டேவிட் ஜஸ்டிஸ் என்ற பேஸ்பால் வீரரை 1993-ல் மணந்து, 1997-ல் விவாகரத்து செய்தார். இசைக் கலைஞர் எரிக் பென்னெட்டை 2001-ல் மணந்து, 2005-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். நடிகர் ஒலிவியர் மார்டினெஸ்ஸை 2013-ல் மணந்து, 2016-ல் விவாகரத்து செய்தார். இடையில் கேப்ரிய ஆப்ரே என்ற விளம்பர மாடலுடன் 2005-லிருந்து 2010-ம் ஆண்டு வரை திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்.

மார்டினெஸ்ஸுடன் மாசியோ என்ற குழந்தையும், கேப்ரியலுடன் நாஹ்லா என்ற குழந்தையையும் ஹாலே பெர்ரி பெற்றெடுத்தார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய ஹாலே பெர்ரி, தனது உறவு நிலை குறித்துப் பகிர்ந்துள்ளார்.

"எனது குழந்தைகளுடன் இருந்ததில் நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இப்போது எனக்குச் சிறந்த துணை அவர்கள் தான். மாசியோவின் அப்பாவை நான் விவாகரத்து செய்த போது தனியாகத்தான் இருந்தேன். இப்போது மூன்று வருடம் ஆகிறது.

நான் (அடிப்படையில்) உறவை விரும்புபவள். எப்போதும் யாருடனாவது இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் இப்போது சற்று நிதானிக்க வேண்டும், நேரமெடுத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். நான், என்னுடன் நேரத்தைச் செலவிடப் போகிறேன். இதுவரை என் தனிமை அற்புதமாக வருகிறது. நான் இப்படியே இருந்துவிடலாம் என நினைக்கிறேன். நான் தனியாக இருக்கக் கற்றுக் கொள்வதற்கு ஒரு வருடம் ஆகும் என்று நினைத்தேன். ஒன்று இரண்டானது, இரண்டு இப்போது மூன்றாவது வருடமாகிவிட்டது.

நான் நலமாக இருக்கிறேன். எனது அடுத்த உறவில் என்னால் சரியான தேர்வைச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் எனக்கு எது முக்கியம் என்பதை இந்த நேரத்தில் சிந்தித்திருக்கிறேன். ஆனால் கண்டிப்பாக ஒரு உறவு தேவை என்ற நிலையில் நான் இல்லை. அவசரப்பட்டு எனக்குப் பொருத்தமில்லாத யாரையும் ஏற்கவேண்டிய தேவையில்லை.

நாம் நமக்கே துணையாக இருப்பது ஒரு பரிசைப் போல. இது வயது ஆக ஆகத்தான் புரியும் என்று நினைக்கிறேன். ஒரு சின்ன சுற்றுலா, வார இறுதிப் பயணம் என்று எதையாவது செய்து அந்த உணர்வு எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக அந்த நேரத்தை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நான் உறுதியுடன் கூறுகிறேன். உங்களுக்குத் துணையாக நீங்கள், உங்களுடன் இருப்பதே மிக முக்கியமான துணை" என்று ஹாலே பெர்ரி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in