

‘ஜாக் ரீச்சர்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை டாம் க்ரூஸிடம் இழந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வேய்ன் ஜான்ஸன் கூறியுள்ளார்.
2012ஆம் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘ஜாக் ரீச்சர்’. இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜாக் ரீச்சர் - நெவர் கோ பேக்’ படம் 2016ஆம் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றியை குவித்த படங்கள்.
துப்பறியும் த்ரில்லர் வகையை சேர்ந்த இப்படங்கள் லீ சைல்ட் எழுதிய நாவல்களை தழுவி எடுக்கப்பட்டவை. ‘ஜாக் ரீச்சர்’ முதல் பாகத்தை க்ரிஸ்டோபர் மெக்குயரியும், இரண்டாவது பாகத்தை எட்வர்ட் ஜ்விக் இயக்கியுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை டாம் க்ரூஸிடம் இழந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வேய்ன் ஜான்ஸன் கூறியுள்ளார்.
இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் கூறியுள்ளதாவது:
அதிர்ஷ்டவசமாக ஆரம்பத்தில் இருந்தே என்னுடைய எல்லா கதாபாத்திரங்களும் எனக்காக எழுதப்பட்டவையாகவே இருந்தன. ஜாக் ரீச்சரை தவிர.
10 ஆண்டுகளுக்கு முன்பு டாம் க்ரூஸ் உலகத்திலேயே மிகப்பெரிய ஸ்டாராக இருந்தார். ஆனால் அப்போது நான் ஒரு சாதாரண நடிகனாக இருந்தேன். அவரிடம் ‘ஜாக் ரீச்சர்’ பட வாய்ப்பை இழந்தேன்.
ஆனால் இந்த பிரபஞ்சம் வேடிக்கையான முறையில் இயங்குகிறது. எனக்கு அந்த ஒரு கதவு அடைக்கப்பட்ட போது இன்னொரு கதவு திறந்தது. என்னுடைய டிஎன்ஏவில் ஊறிய ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது. ஃபாஸ்ட் 5 படத்தில் இருந்த லூக் ஹாப்ஸ் கதாபாத்திரம் தான் அது’
இவ்வாறு ட்வேய்ன் ஜான்ஸன் கூறியுள்ளார்.