மீண்டும் பேட்மேன் உருவான கதை அல்ல: மேட் ரீவ்ஸ் விளக்கம்

மீண்டும் பேட்மேன் உருவான கதை அல்ல: மேட் ரீவ்ஸ் விளக்கம்
Updated on
1 min read

'தி பேட்மேன்' திரைப்படம், பேட்மேன் எப்படி உருவானார் என்ற கதையாக இருக்காது என்று அப்படத்தின் இயக்குநர் மேட் ரீவ்ஸ் கூறியுள்ளார்.

மைக்கேல் கீடன், வால் கில்மர், ஜார்ஜ் க்ளூனி உள்ளிட்ட பல நடிகர்கள் பேட்மேன் கதாபாத்திரத்தில் இதுவரை நடித்துள்ளனர். ஆனால், கிறிஸ்டியன் பேல் நடிப்பில் கிறிஸ்டொஃபர் நோலன் இயக்கத்தில் வந்த 'பேட்மேன் பிகின்ஸ்' திரைப்படம்தான், பேட்மேன் கதாபாத்திரம் எப்படி உருவானது என்பதைச் சொல்லியது.

தொடர்ந்து 'டார்க் நைட்', 'டார்க் நைட் ரிட்டர்ன்ஸ்' என இரண்டு படங்களுடன் இந்த திரை வரிசையிலிருந்து நோலன் விலகினார். இதற்குப் பின் ஸாக் ஸ்னைடர் இயக்கத்தில் பென் ஆஃப்லெக் பேட்மேனாக நடிக்க, 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன், 'ஜஸ்டிஸ் லீக்' ஆகிய படங்கள் வெளியாயின.

தற்போது ராபர்ட் பேட்டின்சன் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடிக்க, மேட் ரீவ்ஸ் 'தி பேட்மேன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். புதிய நடிகர், புதிய இயக்குநர் என்றதும், இதுவும் பேட்மேன் கதாபாத்திரம் உருவான கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேட் ரீவ்ஸ் இதை மறுத்துள்ளார்.

இது ஒரு மர்மப் படமாக இருக்கும் என்று கூறியுள்ள ரீவ்ஸ், “ நான் பேட்மேன் உருவான கதையை எடுக்க வேண்டாம் என்றும், அதே நேரத்தில் அவனது ஆரம்பக் காலத்தை அங்கீகரிக்கும் ஒரு கதையாகவும் இருக்க வேண்டும் என்றும் நினைத்தேன். மிகவும் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவன், அதிலிருந்து மீண்டு வர முயல்கிறான். ஆனால் அவனால் தன்னை ஒழுங்காகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அதாவது பேட்மேன் என்ற கதாபாத்திரத்தைச் செலுத்துவது என்ன என்பது பற்றிய யோசனையே அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயமாக இருக்கும். இதில் மனோதத்துவ ரீதியான, மிகவும் உணர்ச்சிகரமான விஷயங்கள் உள்ளன. கோதம் என்ற (பேட்மேன் வசிக்கும்) நகரத்தில் இருக்கும் ஊழலோடு சேர்த்து அதைத் தெரிந்துகொள்ள வழி இருக்கிறது" என்று விவரித்துள்ளார்.

இந்தப் படத்தில் காலின் ஃபெர்ரல், பென்குயின் என்ற வில்லன் கதாபாத்திரத்திலும், பால் டானோ, ரிட்லர் என்ற வில்லனாகவும் நடிக்கின்றனர். ஸோ க்ரேவிட்ஸ், கேட்வுமன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

'தி பேட்மேன்’ ஜூன் 5, 2021 அன்று வெளியாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in