எகிறிய பட்ஜெட்: நெட்ஃப்ளிக்ஸ், ஆப்பிளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் மார்ட்டின் ஸ்கார்செஸி
பட்ஜெட் பிரச்சினையால் தனது 'கில்லர்ஸ் ஆஃப் தி மூன்' படத்தின் விநியோக உரிமையை விற்க மார்ட்டின் ஸ்கார்செஸி தரப்பிலிருந்து நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது.
மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் ராபர்ட் டி நிரோ, லியோர்னாடோ டிகாப்ரியோ இணைந்து நடித்து வரும் படம் 'கில்லர்ஸ் ஆஃப் தி மூன்'.
1920களில் அமெரிக்காவின் ஓசே என்ற பகுதியில் நடைபெற்ற படுகொலைகளைப் பற்றிய 'கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது இப்படம். இப்படத்தை பாரமவுண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் பட்ஜெட் தற்போது 200 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது பாராமவுண்ட் நிறுவனத்தாருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே பாராமவுண்ட் நிறுவனத்தின் வற்புறுத்தலின் பேரில் 'கில்லர்ஸ் ஆஃப் தி மூன்' படத்தின் விநியோக உரிமையை விற்க மார்ட்டின் ஸ்கார்செஸி தரப்பிலிருந்து நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது.
நெட்ஃப்ளிக்ஸ், ஆப்பிள் தவிர்த்து எம்ஜிஎம் ஸ்டுடியோஸ், யுனிவர்சல் ஆகிய நிறுவனங்களையும் மார்ட்டின் ஸ்கார்செஸி தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் வெளியான ‘தி ஐரிஷ்மேன்’ திரைப்படத்துக்கும் இதே பட்ஜெட் பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
