

அமெரிக்க தொலைக்காட்சியில் பிரபலமான எல்லன் டிஜெனரஸ் நெட்டிசன்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டுள்ளார். தனது வீட்டில் தனிமையில் இருப்பது சிறையில் இருப்பதைப் போல என்று அவர் சொன்னதற்குத்தான் இந்த எதிர்வினை.
தனது மனைவி போர்ஷியாவுடன் தனது மாளிகையில் சுய தனிமையில் இருந்து வருகிறார் எலன் டிஜெனரஸ். வழக்கமாக ஸ்டூடியோவில் நடக்கும் 'தி எலன் ஷோ' நிகழ்ச்சியை இம்முறை தனது வீட்டிலிருந்தே வழங்கினார் எலன்.
இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், கரோனாவால் தனிமையில் இருந்தது சிறையில் இருந்ததைப் போல உணரவைத்தது என்று நகைச்சுவையாகப் பேசினார். மேலும், பத்து நாட்களாக நான் ஒரே துணிகளைத்தான் அணிந்து வருகிறேன் என்றும் அவர் சொன்னார். இதற்கு ட்விட்டரில் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.
அவரது பிரம்மாண்ட மாளிகையில் ஓய்வெடுப்பதே சிறை என்று சொன்னதால் ஒரு பயனர், "பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உடைகளில், உங்கள் மாளிகையில் தனிமையில் இருப்பதைப் போல சிறையில் இருக்கவே இருக்காது" என்று பதில் பதிவிட்டுள்ளார்.
"ஆஹா என்ன ஒரு அபாரமான காட்சி எலன். நிஜமாகவே ஆயிரக்கணக்கானோர் சிறையில், சோப்பு உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு கூட இல்லாமல் நம்பிக்கையில் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று இன்னொருவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், ''எலன்தான் மோசமானவர்'', ''இவர் ஒரு வருடத்தில் பல மாளிகைகளை வாங்கி, அதை மறுவடிவமைத்து விற்றவர் தானே'' என்று எண்ணற்ற நெட்டிசன்கள் தங்கள் கோபத்தைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.
'எலன் ஷோ' மார்ச் இரண்டாம் வாரத்தின் போது கரோனா பிரச்சினையால் நிறுத்திவைக்கப்பட்டது. கடந்த வாரம், தனது வீட்டிலிருந்தே தான் இந்த நிகழ்ச்சியைத் தொடரவுள்ளதாக அறிவித்தார் எலன்.