

தான் இந்தியா திரும்ப ஆர்வத்துடன் இருந்ததாகவும், தற்போது நிலவும் சூழலால் அது முடியவில்லை என்றும் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் கூறியுள்ளார்.
'தோர்' உள்ளிட்ட மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் 'எக்ஸ்ட்ராக்ஷன்' என்ற படம் வெளிவரவுள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்க, முதலில் 'தாகா' என்று பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு அகமதாபாத், மும்பை என இந்திய நகரங்களில் நடந்தது. ரந்தீப் ஹோண்டா, பங்கஜ் த்ரிபாதி, பியான்ஷு பைன்யுல்லி, ருத்ராக்ஷ் ஜைஸ்வால் உள்ளிட்ட இந்திய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். சர்வதேச க்ரிமினல் ஒருவரின் கடத்தப்பட்ட மகனை ஹெம்ஸ்வொர்த் மீட்பதே படத்தின் கதை. 2018-ம் ஆண்டே படப்பிடிப்பு முடிந்தாலும் தற்போதுதான் படம் வெளியாகவுள்ளது.
முன்னதாக மார்ச் 16 அன்று இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஹெம்ஸ்வொர்த் இந்தியா வருவதாக இருந்தது. கரோனா அச்சம் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்தானது. எனவே தற்போது ஒரு வீடியோ மூலமாக தனது ரசிகர்களுக்கு ஹெம்ஸ்வொர்த் செய்தி அனுப்பியுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது:
"வணக்கம் இந்தியா. ஆஸ்திரேலியாவிலிருந்து கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் பேசுகிறேன். இந்தப் படம் எடுக்கப்பட்ட இந்தியாவுக்கு வந்து அங்கு கொண்டாட மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். இந்தியாவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை மறக்கவே முடியாது. மீண்டும் அங்கு வர ஆவலாக இருந்தேன்.
ஆனால், இப்போது உலகில் என்ன நடக்கிறது என உங்கள் அனைவருக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் வீட்டில் இருக்கிறேன். இப்போது அனைவருக்கும் கடினமான சூழல் என்று எனக்குத் தெரியும். எனவே நீங்கள் ரசிப்பீர்கள் என்று ஒரு விஷயத்தைப் பகிர விரும்பினேன். அடுத்து வெளிவரவுள்ள எனது எக்ஸ்ட்ராக்ஷன் படத்தின் ட்ரெய்லரை எதிர்பாருங்கள். இது ஒரு அற்புதமான ஆக்ஷன் படம். என் நண்பர் சாம் ஹர்க்ரேவ் இயக்கியது. ஏப்ரல் 24 அன்று நெட்ஃபிளிக்ஸ் இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளனர்.
இந்தப் படத்தில் சிறந்த இந்திய நடிகர்கள் சிலருடன் நடித்ததில் எனக்குப் பெருமை. நீங்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். அனைவருக்கும் என் அன்பு, நல்லெண்ணங்கள். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்".
இவ்வாறு ஹெம்ஸ்வொர்த் குறிப்பிட்டுள்ளார்.