

'ப்ளாக் விடோ' மற்றும் 'முலான்' படங்களின் புது வெளியீட்டுத் தேதிகளை டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
கரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நிலவுகிறது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல திரைப்படங்களின் வெளியீடுகள் தள்ளிப்போயிருக்கின்றன. மே 1 ஆம் தேதி வெளியாக விருந்த மார்வல் சினிமா உலகத்தின் 'பிளாக் விடோ' திரைப்படமும் தள்ளிப்போனது. மற்றொரு டிஸ்னி தயாரிப்பான 'முலான்' படமும் தள்ளிப்போனது.
தற்போது 'பிளாக் விடோ' நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என்றும், 'முலான்' ஜூலை 24 ஆம் தேதி வெளியாகும் என்றும் டிஸ்னி அறிவித்துள்ளது. இந்தத் தேதி மாற்றத்தினால் மற்றொரு மார்வல் - டிஸ்னி திரைப்படமான எடர்னல்ஸின் வெளியீடு பிப்ரவரி 12, 2021க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏஞ்சலினா ஜோலி, சல்மா ஹைக், கிட் ஹாரிங்டன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் படம்.
இதனால் தொடர்ந்து 'ஷாங் சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ்' (மே 7, 2021), 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2' (நவம்பர் 5,2021) மற்றும் 'தார்: லவ் அண்ட் தண்டர்' (பிப்ரவரி 18, 2022) ஆகிய படங்களின் வெளியீடுகளும் தள்ளிப்போயுள்ளன.
'பிளாக் பேந்தர் 2' மே 6, 2022 மற்றும் 'கேப்டன் மார்வல் 2' ஜூலை 8, 2022 என முன்னரே அறிவிக்கப்பட்டபடி வெளியாகும். இந்தத் தேதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.