

திரைப்படக் கலை மற்றும் அறிவியலுக்கான அகாடமி, திரைத்துறையில் இருக்கும் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணமாக 6 மில்லியன் டாலரைக் கொடுத்துள்ளது.
உலகமெங்கும் கோவிட்-19 கிருமித் தொற்று அச்சுறுத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. இதற்கு உதவுவதற்காக பல்வேறு பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகிறார்கள். தற்போது ஆஸ்கர் அகாடமியும் நிதியுதவி அளித்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்கர் அகாடமி இன்று வெளியிட்ட அறிக்கையில், 4 மில்லியன் டாலர் நிதி நடிகர்கள் நிதியுடன் சரிவிகிதத்தில் பகிரப்படும் என்றும், திரைக்குப் பின்னால் வேலை செய்யும் பணியாளர்கள், நடிகர்கள் மற்றும் சின்னத்திரைக் கலைஞர்களும் இதில் பலனடைவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள அகாடமி அறக்கட்டளைக்கு 2 மில்லியன் டாலர்கள் வழங்கப்படுகிறது.
"நாம் நோய்த்தொற்றை எதிர்கொண்டிருக்கும் இந்த வேளையில், திரைப்பட சமுதாயத்தில் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது எங்கள் கடமை. நடிகர்கள் நிதி, சின்னத்திரை நிதி மற்றும் அகாடமியின் அறக்கட்டளைக்கு நிதி அளித்ததன் மூலம், அத்தியாவசியத் தேவை இருக்கும் எங்களின் நீண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவ முடியும்" என அகாடமியின் தலைவர் டேவிட் ரூபின் தெரிவித்துள்ளார்.