பாதுகாப்பாக, வலிமையுடன் இருங்கள்: கரோனா அச்சுறுத்தல் தொடர்பாக ஜாக்கி சான் வேண்டுகோள்

பாதுகாப்பாக, வலிமையுடன் இருங்கள்: கரோனா அச்சுறுத்தல் தொடர்பாக ஜாக்கி சான் வேண்டுகோள்
Updated on
1 min read

பாதுகாப்பாக, வலிமையுடன் இருங்கள் என்று ஜாக்கி சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் அச்சுறுத்தல், தற்போது உலகமெங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதனால், பல்வேறு உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. மேலும், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

இதைக் கட்டுப்படுத்த பல்வேறு ஹாலிவுட் திரையுலகப் பிரபலங்கள் கூட நிதியுதவி அளித்து, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். தற்போது, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"அனைவருக்கும் வணக்கம், நான் ஜாக்கிசான். இது எல்லோருக்கும் மிகவும் கடினமான காலகட்டம் என்பது எனக்குத் தெரியும். நாம் அனைவரும் ஒரே பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறோம். கரோனா வைரஸ். உங்கள் குடும்பத்துடன் வீட்டிலேயே இருப்பதும், உங்கள் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றுவதும் மிகவும் முக்கியம்.

வெளியே போகிறீர்கள் என்றால் முகக் கவசத்தைப் போட மறக்காதீர்கள். அடிக்கடி உங்கள் கைகளைக் கழுவுங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்வது உங்கள் குடும்பத்தைப் பாதுகாத்துக் கொள்வது போல. பாதுகாப்பாக, வலிமையுடன் இருங்கள். ஒரு பிரகாசமான எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். ஜெய் ஹோ, நன்றி".

இவ்வாறு ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in