இந்தியர்களுக்கு என்னுடைய அன்பு - மனம் திறக்கும் மனி ஹெய்ஸ்ட் ‘ப்ரொஃபஸர்’

இந்தியர்களுக்கு என்னுடைய அன்பு - மனம் திறக்கும் மனி ஹெய்ஸ்ட் ‘ப்ரொஃபஸர்’
Updated on
1 min read

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்பானிஷ் தொடர் ‘மனி ஹெய்ஸ்ட்’. வங்கிக் கொள்ளை தொடர்பான கதைக்களம் கொண்ட இத்தொடரின் நான்காவது சீஸன் நேற்று வெளியாகியுள்ளது. இத்தொடர் சம்மந்தப்பட்ட ஹாஷ்டாகுகள் சமூக வலைதளங்களில் உலக அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.

‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரின் புகழ்பெற்ற கதாபாத்திரம் ‘ப்ரொஃபஸர்’. இக்கதாபாத்திரத்தில் நடித்துள்ள அல்வாரோ மோர்டே உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அல்வாரோ மோர்டே கூறியிருப்பதாவது:

என்னால் முடிந்த அளவு பொறுப்புணர்வோடு இருக்கிறேன். மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்கிறேன். நாம் நல்லபடியாக வாழ பலர் மிகவும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஒரு தனி மனிதனாகவும், ஒரு சமூகமாகவும் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வோடு இருக்க முயற்சிக்க வேண்டும். ஒரு நல்ல சமூகமாக உருவடுக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை இந்த காலகட்டத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியாவில் இருப்பவர்களுக்கு என்னுடைய அன்பை இங்கிருந்து தெரிவிக்கிறேன். இந்த ஊரடங்கின் அனைவருக்கும் மூலம் வலிமையும் தைரியமும் கிடைக்கட்டும். மனி ஹெய்ஸ்ட் தொடர் உங்களுக்கு சிறிது மகிழ்ச்சியை தரும் என்று நம்புகிறேன்.

இந்த தொடரின் கதாபாத்திரங்கள் எத்தனை வலிமையானவை என்று எனக்கு புரிகிறது. அதில் வரும் சிவப்பு ஆடைகளும், டாலி முகமூடிகளும், பெல்லா சியோ பாடலும் நிறைய தகவல்களை கொண்டுள்ளன. வரலாற்றில் பல விஷயங்களை மனித இனம் கடந்து வந்துள்ளது. அதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த பாடலின் மூலம் நாம் சாதித்த விஷயங்களை மறந்து விடக் கூடாது என்று பார்வையாளர்களுக்கு நாங்கள் சொல்கிறோம். நாம் பின்னோக்கி சென்று விடாமல் எப்போதும் முன்னோக்கியே செல்லவேண்டும்.

இந்த ப்ரொஃபஸர் கதாபாத்திரம் இதயப்பூர்வமான பல பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வது போல சிக்கலாக அமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அந்த கதாபாத்திரத்தின் கூற்றுப்படி மூளை என்பது ஓர் இயந்திரம். அவர் மற்றவர்களை குற்றம்சாட்டும் ஒரு விஷயத்தில் அவரே மாட்டிக்கொள்வதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது.

தொழில் ரீதியாக இத்தொடர் பல விஷயங்களை மாற்றியிருக்கிறது. இத்தொடரின் மூலம் எனக்கு நிறைய வாய்ப்புகள் குவிகின்றன. மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னுடைய தனிமையை இழந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். எந்நேரமும் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். அதிலிருந்து என் குடும்பத்தை முடிந்தவரை காப்பாற்ற முயற்சி செய்வேன்’

இவ்வாறு அல்வாரோ மோர்டே கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in