

ஜூன் மாதம் வெளியாகவிருந்த டாம் க்ரூஸின் 'டாப் கன் மேவரிக்' திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'மினியான்ஸ் ரைஸ் ஆஃப் க்ரூ' படமும் அடுத்த வருடம் ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் இருப்பதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. எப்போது இயல்பு நிலை திரும்பும், இயல்பு நிலை திரும்பினாலும் மக்கள் மீண்டும் கூட்டமாகக் கூடுவார்களா, திரையரங்குக்கு வருவார்களா என்ற நிச்சயமற்ற நிலை நிலவுவதால் இந்த வருடம் வெளியாகவிருந்த பல திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதிகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளன.
டாம் க்ரூஸ் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான படம் 'டாப் கன்'. இன்று வரை இது ஒரு கிளாஸிக் படமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 34 வருடங்கள் கழித்து இந்த வருடம் ஜூன் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் இப்போது படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று டாம் க்ரூஸ் அறிவித்துள்ளார்.
"உங்களில் பலர் 34 வருடங்கள் காத்திருந்தீர்கள் என்று எனக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். டாப் கன்: மேவரிக் இந்த டிசம்பர் வானில் பறக்கும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என டாம் க்ரூஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதைப் போலவே ஜூலை மாதம் வெளியாகவிருந்த 'மினியான்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் 'ரைஸ் ஆஃப் க்ரூ', அடுத்த வருடம் ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கரோனா பாதிப்பால் 'ஜேம்ஸ் பாண்ட் நோ டைம் டு டை', 'எ கொயட் ப்ளேஸ் 2', 'எஃப் 9' ஆகிய படங்களின் வெளியீடுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.