கரோனா பாதிப்பால் கிராமி விருது பெற்ற இசைக்கலைஞர் உயிரிழப்பு

கரோனா பாதிப்பால் கிராமி விருது பெற்ற இசைக்கலைஞர் உயிரிழப்பு
Updated on
1 min read

கரோனா தொற்று பாதிப்பால் கிராமி விருது வென்ற ஜோ டிஃப்பி காலமானார். அவருக்கு வயது 61.

சர்வதேச அளவில் அனைத்து நாடுகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்படப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன.

தினமும் பல நூறு பேர் இந்தத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் இருக்கின்றனர். அவ்வப்போது இதிலிருந்து மீண்டவர்கள் பற்றிய செய்திகள் வந்தாலும் கரோனாவால் மரணித்தவர்கள் பற்றிய செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.

அப்படி 90-களில் பிரபலமாக இருந்த அமெரிக்கப் பாடகர் ஜோ டிஃப்பி கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சில நாட்களுக்கு முன்புதான், தனக்கு கரோனா தொற்று இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளதாகவும் ஜோ பகிர்ந்திருந்தார்.

அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், "எனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவச் சிகிச்சையில் இருக்கிறேன். இந்த நேரத்தில், என் குடும்பமும், நானும், எங்கள் தனிமை நேரத்தை தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். இந்தக் காலகட்டத்தில் அனைவரும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று ஜோ டிஃப்பி பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் ஜோ டிஃப்பியின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கரோனா தொற்று காரணமாக மார்ச் 29-ம் தேதி அன்று காலமானார் என்ற தகவல் பகிரப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in