

கரோனா முன்னெச்சரிக்கை சமயத்தில் அமேசான் ப்ரைம் ஸ்ட்ரீமிங் தளத்தின் அறிவிப்பால் பயனீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சர்வதேச அளவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக, பல்வேறு நாடுகள் ஸ்தம்பித்துள்ளன. இதன் காரணமாகத் திரையரங்குகள் அனைத்துமே மூடப்பட்டுள்ளன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர்.
வீட்டிற்குள் இருக்கும் மக்களின் பொழுதுபோக்காக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் மாறி வருகின்றன. இந்தத் தளங்களில் பல்வேறு படங்கள் எச்.டி. முறையில் துல்லியமாகக் காணும் வசதி உள்ளது. தற்போது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கில் முக்கியமான தளமான, அமேசான் ப்ரைம் தளம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "அமேசான் ப்ரைமில் நீங்கள் தொடர்ந்து படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்கும் நேரத்தில், நாட்டில் உள்ள அனைவருக்கும் மொபைல் போனில் இன்டர்நெட் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். சில தவிர்க்கமுடியாத சூழல்களால் நெட்வொர்க் தடையைக் குறைக்க ஏப்ரல் 14-ம் தேதி வரை செல்போன்களில் எஸ்டி (சாதாரண குவாலிட்டி)யில் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய இருக்கிறோம்.
எச்டியோ அல்லது எஸ்டியோ நாங்கள் உங்களைத் தொடர்ந்து மகிழ்விப்போம். தயவுசெய்து பாதுகாப்பாக இருக்கவும்" என்று குறிப்பிட்டுள்ளது அமேசான் நிறுவனம்.
இந்த அறிவிப்பால் இதன் பயனீட்டாளர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.