

உலகம் முழுவதும் உள்ள தனது பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் 100 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 4 பேர் இறந்துள்ளனர். வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
கோவிட் - 19 வைரஸை ‘உலகளாவிய நோய்த் தொற்று' என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் உலகம் முழுவதும் பல்வேறு தொழில்துறைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களின் படப்பிடிப்புகள் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் உலகம் முழுவதுமுள்ள அதன் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.
இது நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“கோவிட் -19 வைரஸ் திரைப்பட துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட உலகம் முழுவதுமுள்ள அனைத்து திரைப்பட மற்றும் தொலைகாட்சி தொடர் தயாரிப்புகள் முடக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான பணியாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதில் பலர் எலக்ட்ரீசியன்ஸ், கார்பெண்டர்ஸ், ஓட்டுநர்கள், உள்ளிட்ட அன்றாட வருமானத்தை நம்பியிருப்பவர்கள் ஆவர். இவர்கள் நெட்பிளிக்ஸின் மகிழ்ச்சியான தருணங்களில் உடன் நின்றவர்கள். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு நாங்கள் உதவ விரும்புகிறோம். குறிப்பாக அரசாங்கங்கள் அவர்களுக்கு என்ன பொருளாதார உதவி செய்வது என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கின்றன.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.