

டிஸ்னி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் தளத்தின் சேவை தொடங்கும் தேதி கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மாற்றுத் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 29 ஆம் தேதி இந்தியாவில் டிஸ்னி+ ஸ்ட்ரீமிங் தள சேவை தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஐபிஎல் தொடரும் இதே தேதியில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. டிஸ்னியின் இன்னொரு ஸ்ட்ரீமிங் தளமான ஹாட் ஸ்டாரில்தான் ஐபிஎல் ஆட்டங்கள் நேரலையாக ஸ்ட்ரீமிங் ஆகவிருந்தன. எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி டிஸ்னி+ சேவைக்கான விளம்பரத்தை அனைத்துத் தரப்புக்கும் எடுத்துச் செல்லலாம் என டிஸ்னி தரப்பு நினைத்திருந்தது.
ஆனால், கரோனா தொற்று பாதிப்பால் ஐபில் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் டிஸ்னி+ சேவையின் தொடக்கத்தை இப்போதைக்கு டிஸ்னியும் ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக, மார்ச் 11ஆம் தேதி டிஸ்னி+ சேவை ஒரு நாள் மட்டும் சோதனை ஓட்டமாகத் தொடங்கப்பட்டது. 2018-ம் ஆண்டிலிருந்து 2022-ம் ஆண்டு வரை, ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்புக்காக டிஸ்னியின் ஸ்டார் நெட்வொர்க் குழுமம் 2.55 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் ஐபிஎல் இறுதி ஆட்டத்தை ஹாட் ஸ்டார் தளத்தில் கண்ட ஹாட் ஸ்டார் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மட்டுமே 1.86 கோடி பேர் என்பது நினைவுகூரத்தக்கது.