

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரில் நடித்த இந்திரா வர்மா என்ற நடிகைக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் - 19 வைரஸ் காய்ச்சல், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, கோவிட் - 19 வைரஸை ‘உலகளாவிய நோய்த் தொற்று' என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த வாரம் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸும் அவரது மனைவியும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ‘குவாண்டம் ஆஃப் சொலாஸ்’ படத்தில் நடித்துள்ள ஓல்கா குரிலென்கோ, 'தோர்' மற்றும் 'அவெஞ்சர்ஸ்' படங்களில் நடித்த இட்ரிஸ் எல்பா ஆகியோரும் தங்களுக்கு கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் பிரபலமான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரில் எல்லாரியா சாண்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இந்திரா வர்மா தனக்கு கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். தற்போது அவர் லண்டனில் நடைபெற்று வந்த ஆண்டன் செகாவின் ‘தி சீகல்ஸ்’ நாடகத்தில் நடித்து வந்தார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்த நாடகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ள இந்திரா வர்மா, “நான் கரோனா வைரஸ் பாதிப்பால் படுக்கையில் இருக்கிறேன். இது நன்றாக இல்லை. உடல்நலத்துடனும் பாதுகாப்பாகவும், உங்கள் சக நண்பர்களுடன் அன்பாகவும் இருங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் நடித்த கிறிஸ்டோபர் ஹிவ்ஜு என்ற நடிகருக்கு கடந்த வாரம் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.