

கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீடா வில்சன் இருவரும் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீடா வில்சன் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை டாம் ஹாங்க்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.
டாம் ஹாங்க்ஸ் ஒரு திரைப்படப் படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவில் இருக்கும்போது அவருக்கும் அவர் மனைவிக்கும் இந்தத் தொற்று ஏற்பட்டது.
இது குறித்து டாம் ஹாங்க்ஸ் தனது பதிவில், ''எங்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுச் சுகாதாரம், பாதுகாப்புக்குத் தேவைப்படும் வரை பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, தனிமையில் இருப்போம்” என்று கூறியிருந்தார்.
டாம் ஹாங்க்ஸ் கரோனா வைரஸால் பாதிப்பட்டிருந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கும் அவரது மனைவி ரீடாவுக்கும் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில் டாம் ஹாங்க்ஸ் மற்றும் ரீடா ஹாங்க்ஸ் இருவரும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதை டாம் ஹாங்க்ஸின் மகன் செட் ஹாங்க்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''எனது தாய், தந்தை இருவரும் தற்போது வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் அவர்கள் இன்னும் சிகிச்சையில்தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நலமுடன் இருப்பது நிம்மதியாக இருக்கிறது. நீங்களோ உங்கள் அன்புக்குரியவர்களோ வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். ஏனென்றால் என் பெற்றோரைத் தாண்டி பலரும் தற்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்குள்ளான டாம் ஹாங்க்ஸ் மருத்துவமனையில் இருந்து தற்போது வீடு திரும்பியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.