

கரோனா வைரஸ் பாதிப்பால் ஜேம்ஸ் பாண்ட் ‘நோ டைம் டு டை’ படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1953 ஆம் ஆண்டு இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். 1962 ஆம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 24 படங்கள் வெளியாகியுள்ளன. வியக்கவைக்கும் ஆக்ஷன் காட்சிகள், புதிய தொழில்நுட்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட இப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.
கடைசியாக வெளியான நான்கு பாண்ட் படங்களில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் நடித்து வருகிறார். அடுத்ததாக வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை', ஜேம்ஸ் பாண்டாக க்ரெய்க் நடிக்கும் கடைசிப் படமாகும். இப்படத்தை கேரி ஜோஜி இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகவிருந்தது.
இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் ‘நோ டைம் டு டை’ படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ‘எம்ஜிஎம், யுனிவர்சல், பாண்ட் தயாரிப்பாளர்களான மைக்கேல் ஜி வில்சன், பார்பரா ப்ரோக்கோலி, ஆகியோர் சர்வதேச திரைப்பட சந்தையை பரிபூரணமாக ஆலோசித்து ஆய்வு செய்த பிறகு ‘நோ டைம் டு டை’ படத்தின் வெளியீடு இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.’ என்று கூறப்பட்டுள்ளது.