

யூடியூப் பாணியில் தினமும் ட்ரெண்டிங் பட்டியல் வெளியிடவுள்ளதாக நெட் ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது.
OTT எனப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ப்ளாட்ஃபார்ம் தளங்களில் நெட் ஃபிளிக்ஸ் முன்னணியில் இருந்துவருகிறது. ஏராளமான வெப்சீரிஸ்களும், அனைத்து மொழித் திரைப்படங்களும் நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் குவிந்து கிடக்கின்றன. தொலைக்காட்சி சேனல்களைப் பின்னுக்குத் தள்ளி தற்போது நெட் ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற தளங்களே வீடுகளை ஆக்கிரமித்து வருகின்றன. இந்தத் தளங்கள் தற்போது சொந்தமாகவும் திரைப்படங்கள் மற்றும் வெப் சிரீஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் ஏராளமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கும் நெட் ஃபிளிக்ஸ் தளம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இனி தினமும் எந்தந்த படங்கள் அல்லது வெப் சீரிஸ் அதிகமாகப் பார்க்கப்படுகின்றது என்பதற்கான பட்டியல் ஒன்று நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் இடம்பெறும். ஏற்கெனவே யூடியூபில் இது போன்ற ஒரு பட்டியல் இடம் பெற்றிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல இப்போது நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் இடம் பெறும் என்ற அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ''ட்ரெண்டிங்கில் இருக்கும் 10 படங்கள் அல்லது வெப் சீரிஸ் பட்டியல் தினமும் நெட் ஃபிளிக்ஸில் இடம் பெறும். அதனை க்ளிக் செய்து அந்தப் படங்களைப் பார்த்துக் கொள்ளலாம். அந்தப் பட்டியலில் இடம் பெறும் படங்களுக்கு சிறப்பு டாப் 10 பேட்ஜ் ஒன்று அளிக்கப்படும். அந்தப் படம் எங்கு இடம் பெற்றாலும் அந்த பேட்ஜ் அதன் மீது இருக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல் ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு மாறும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.