

பிரபல ஹாலிவுட் இயக்குநர்கள் மார்டின் ஸ்கார்சஸி மற்றும் க்வெண்டின் டாரண்டினோவுக்கு 'பாராசைட்' இயக்குநர் பாங் ஜூன் ஹோ ஆஸ்கர் மேடையிலேயே நன்றி தெரிவித்துள்ளார்.
92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ், காலிஃபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இதில் 'பாராசைட்' திரைப்படம் சிறந்த திரைக்கதை, சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட முக்கிய விருதுகளை வென்றது.
சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற 'பாராசைட்' இயக்குநர் பாங் ஜூன் ஹோ பேசுகையில், "சிறந்த சர்வதேச திரைப்படம் விருதை வென்ற பின், இன்று இதோடு என் வேலை முடிந்தது என்று நினைத்தேன். ஓய்வெடுக்கலாம் என்று தயாரானேன். மிக்க நன்றி. என் இளம் வயதில் சினிமாவுக்காக படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சொற்றொடரை என் இதயத்தின் ஆழத்தில் பதிய வைத்திருந்தேன்.
அது, 'மிகவும் தனிப்பட்ட படைப்புதான் அதிக படைப்பாற்றல் கொண்டது' என்பதே. இந்த அற்புதமான விஷயத்தை சொன்னது உயரிய மார்டின் ஸ்கார்சஸி" என்று அவர் சொன்னதும் மார்டின் ஸ்கார்சஸி புன்னகைத்தார். கைத்தட்டல் சத்தம் அதிர அனைவரும் ஸ்கார்சஸிக்காக எழுந்து நின்று மரியாதை காட்டினர். பதிலுக்கு அவரும் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஹோ, "நான் படித்துக் கொண்டிருக்கும்போது அவரது படங்களைப் பார்த்துதான் கற்றேன். பரிந்துரை செய்யப்பட்டதே எனக்கு பெரிய கவுரவம். நான் வெற்றி பெறுவேன் என்று நினைக்கவே இல்லை. அமெரிக்க மக்களுக்கு எனது படம் பரிச்சயமாகாத போது க்வெண்டி டாரண்டினோ தான் அவரது பிடித்த படங்கள் பட்டியலில் எனது படத்தையும் சேர்ப்பார். அவரும் இங்கிருக்கிறார். அவருக்கு என் நன்றிகள்.
('ஜோக்கர்' பட இயக்குநர்)டாட் ஃபிலிப்ஸ், ('1917' இயக்குநர்) சாம் மெண்டெஸ் இருவரும் நான் அண்ணாந்து பார்க்கும் இயக்குநர்கள். அகாடமி அனுமதித்தால் ஒரு ரம்பத்தைக் கொண்டு இந்த ஆஸ்கர் விருதை ஐந்தாக வெட்டி உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வேன். நன்றி, நான் நாளை காலை வரை குடிக்கப் போகிறேன்" என்று நகைச்சுவையுடன் கூறி முடிக்க ஆஸ்கர் அரங்கம் கைத்தட்டல்களில் அதிர்ந்தது.