

சார்லி சாப்ளினின் எல்லா படைப்புகளுமே சிறந்தவையாக மதிப்பிடப்பட்டாலும் அவரது குறிப்பிட்ட சில படங்கள் தனிச்சிறப்பு கொண்டவை. அதில் ஒரு படமான ‘மாடர்ன் டைம்ஸ்’ வெளியான நாள் இன்று. 1936-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், சினிமாவில் எத்தனையோ நவீனங்களைப் பார்த்துப் பழகிவிட்ட பார்வையாளர்களுக்கு இன்னும் அலுக்காத நகைச்சுவைக் காவியமாக இன்றும் திகழ்கிறது.
பெரும் பொருளியல் வீழ்ச்சி நடந்த காலகட்டத்தில் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் தொழிலாளிக்கு ஏற்படும் அனுபவங்களே இந்தப் படம். நவீன சாதனங்களின் வேகத்துக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகும் அந்தத் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். குணமாகி வெளியே வரும் அவனை, கம்யூனிஸ்ட் போராட்டக்காரன் என்று நினைத்துக் கைது செய்கின்றனர். விடுதலையான பின், பசிக்காக ரொட்டித் துண்டைத் திருடிக் கொண்டு ஓடி வரும் ஒரு இளம் பெண்ணின் மீது காதல் கொள்கிறான். இவர்கள் இருவரும் போலீஸிடமிருந்து தப்பித்து தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயல்கின்றனர். கடைசியில் இவர்கள் தப்பிப்பதே இந்தப் படம்.
‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற பெயருக்கு ஏற்றார் போல இன்றளவுக்கும் ஏற்புடையதாகவே இந்தப் படம் அமைந்திருக்கிறது. ஆட்டு மந்தை கூட்டம் போல மக்கள் எப்படி முதலாளித்துவ உலகில் இயந்திரத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று காட்டும் முதல் காட்சியிலிருந்தே இது எக்காலத்துக்கும் ஏற்ற படம் என்பது தெளிவாகிவிடும். இதோடு இந்தப் படத்தில் சாப்ளின் தீர்க்கதரிசனத்தோடு காட்டிய தொழில்நுட்பங்கள் இன்று நம்மைச் சுற்றி, நம் அந்தரங்க வாழ்க்கையையும் ஆக்கிரமித்துள்ளதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகவே இருக்கிறது.
சிசிடிவி கேமரா எனும் கண்காணிப்பு கேமரா இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனியில் ராணுவ காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கும் முன்பே, ‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தில் ஒரு விநோதமான சிசிடிவி கேமரா காட்டப்பட்டிருக்கும். திரையுடன் கூடிய சிசிடிவி கேமரா அது. அதன் மூலம் தொழிலாளர்களை முதலாளி கண்காணிப்பது மட்டுமல்லாமல் சற்றே ஓய்வறையில் புகை பிடிக்கப் போகும் சாப்ளின் முன்னால் திரையில் தோன்றி, வேலையைப் பார் என்று அதட்டுவார். இன்று அலுவலக சிசிடிவி கேமராவுக்குப் பயந்தே வேலை செய்யும் பணியாளர்களின் நிலையை அன்றே சித்திரிக்கும் காட்சி இது.
எந்திர யுகத்தைக் கவலையுடன் எதிர்நோக்கும் படைப்பாக ‘மாடர்ன் டைம்ஸ்’ திகழ்கிறது. தினம் தினம் அறிமுகமாகி வரும் புதிய தொழில்நுட்பத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், சந்தையின் அளவுக்கதிக்கமான தேவைக்கு ஏற்ப ஓட முடியாமல் மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் லட்சக்கணக்கான பணியாளர்களின் பிரதிநிதியாகவே இந்தப் படத்தில் சாப்ளினின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
நாட்டு நடப்பின் மீது விமர்சனம், வெடித்து சிரிக்க வைக்கும் ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவைக் காட்சிகள், ஏழைகளின் வாழ்க்கை, எதிர்பாரதவிதமாக நடக்கும் நல்ல விஷயங்கள், துவண்டு விடாது தன்னம்பிக்கையுடன் வாழ்வது போன்ற சாப்ளின் பாணி மசாலாக்களுக்கும் குறைவில்லாத படம் இது.
முதலில் நாயகன் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, நாயகி கன்னியாஸ்திரியாக மாறுவது போல, இருவரும் பிரிவது போல இறுதிக் காட்சி படமாக்கப்பட்டுவிட்டது. ஆனால் பின்னர் அது நீக்கப்பட்டு இருவரும் இணைவது போல மகிழ்ச்சியான முடிவு மாற்றப்பட்டது.
மவுனப் பட வரிசையில் கடைசி சிறந்த படமாக ‘மாடர்ன் டைம்ஸ்’ பார்க்கப்படுகிறது. சாப்ளினின் கடைசி மவுனப் படமும் இதுவே. அவரது புகழ்பெற்ற ட்ராம் கதாபாத்திரத்துக்கும் இதுவே கடைசிப் படம்.