

‘வெனம் 2’ படத்தை இயக்குவது ஒரு த்ரில் அனுபவமாக உள்ளது என்று ஆன்டி செர்கிஸ் கூறியுள்ளார்
மார்வெல் காமிக்ஸின் புகழ்பெற்ற வில்லன் கதாபாத்திரம் ’வெனம்’. ஸ்பைடர்மேனின் பிரதான எதிரிகளில் வெனம் கதாபாத்திரமும் ஒன்று. 2007ஆம் வெளியான ஸ்பைடர்மேன் படத்தில் முதன்முதலாக ’வெனம்’ கதாபாத்திரம் தோன்றியது. இந்த கதாபாத்திரம் பெற்ற வரவேற்பால் வெனம் பாத்திரத்தை மையமாக வைத்து 2018ஆம் ஆண்டு ‘வெனம்’ திரைப்படம் வெளியானது. இதில் டாம் ஹார்டி, மிச்செல் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை சோனி நிறுவனம் தயாரித்திருந்தது.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ரூபென் ஃப்ளெஸ்ஷர் இப்படத்தை இயக்கவில்லை. அவருக்கு பதில் ஆன்டி செர்கிஸ் இயக்கி வருகிறார். வெனம் 2 படத்தை இயக்குவது குறித்து ஆன்டி செர்கிஸ் கூறியிருப்பதாவது:
’தற்போது இப்படத்தைப் பற்றி என்னால் அதிகம் சொல்லமுடியாது. ஆனால் 40 நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது எங்களுக்கு ஒரு த்ரில் அனுபவமாக உள்ளது. டாம் ஹார்டி ஒரு சிறந்த நடிகர். அவருக்கு வெனமுக்கும் இடையேயே உறவின் ஆழத்தை நாங்கள் காண்கிறோம். இப்படத்தில் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரமும் உண்டு. இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும்”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆன்டி செர்கிஸ் அவெஞ்சர்ஸ் படங்களில் யுலிஸ்ஸிஸ் க்ளா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசியாக 2017ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியான ‘மோக்லி: தி லெஜண்ட் ஆஃப் தி ஜங்கிள்’ படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.