

இனிவரும் 'டெர்மினேட்டர்' படங்களில் நடிக்காமல் இருந்தால் மகிழ்ச்சியடைவேன் என்று நடிகை லிண்டா ஹாமில்டன் கூறியுள்ளார்.
டெர்மினேட்டர் படங்களின் வரிசையில் ஆறாவது படமாக கடந்த ஆண்டு வெளியான படம் 'டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’. அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், ஜேம்ஸ் கேமரூனின் கதை, டெட்பூல் இயக்குநர் டிம் மில்லரின் இயக்கம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்தப் படம் தொய்வான திரைக்கதை, வலுவில்லாத காட்சியமைப்புகளால் உலகம் முழுவதும் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. சில விமர்சகர்கள் ஒருபடி மேலே சென்று இந்தப் படம் எடுக்கப்படாமலே இருந்திருக்கலாம் என்றும் கடுமையாக குறிப்பிட்டிருந்தனர்.
'டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்தது. இந்தப் படத்தின் தயாரிப்புச் செலவு சுமார் 185 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இது தவிர படத்தின் விளம்பரங்களுக்காக மட்டும் ஏறக்குறைய 100 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. படத்துக்குக் கிடைத்துள்ள எதிர்மறை விமர்சனங்களாலும், எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததாலும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ள பாரமவுண்ட், ஸ்கைடான்ஸ், டிஸ்னி ஆகிய நிறுவனங்களுக்கு சுமார் 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் டெர்மினேட்டர் படங்களில் பிரபலமான சாரா கானர் கதாபாத்திரத்தில் நடித்த லிண்டா ஹாமில்டன் இனி வரும் டெர்மினேட்டர் படங்களில் தான் நடிப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ''அதிக பணத்தைக் கொட்டி எடுக்காமல் உருவாகும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். இப்போதுள்ள ரசிகர்களைக் கணிக்க முடியவில்லை. இனிமேல் யாரும் திரையரங்குக்குச் சென்று படம் பார்க்கமாட்டார்கள் என்றே அனைவரும் கூறி வருகின்றனர்.
டெர்மினேட்டர் படங்களைப் பொறுத்தவரை எதிர்காலத்தில் நிச்சயம் பெரிய பட்ஜெட் படமாக இருக்கக்கூடாது. ஆனால் மீண்டும் அவற்றில் நடிக்காமல் இருந்தால் மகிழ்வேன். ஆனால் இதுகுறித்து என்னிடம் பேசப்பட்டால், சாத்தியமான மாற்றங்கள் குறித்து யோசிப்பேன்” என்று லிண்டா ஹாமில்டன் தெரிவித்துள்ளார்.