ஆஸ்கர் நிகழ்ச்சியில் பெரும்பாலும் இயற்கை உணவுகள்: விருதுக் குழுவினர் அறிவிப்பு

ஆஸ்கர் நிகழ்ச்சியில் பெரும்பாலும் இயற்கை உணவுகள்: விருதுக் குழுவினர் அறிவிப்பு
Updated on
1 min read

இந்த ஆண்டு ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பெரும்பாலும் இயற்கை உணவுகளே இடம்பெறவுள்ளதாக விருதுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஹாலிவுட் சினிமாவில் சிறந்த பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிப். 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு சிறந்த படங்களுக்கான பிரிவில் ‘ஜோக்கர்’, ‘தி ஐரிஷ்மேன்’, ‘மேரேஜ் ஸ்டோரி’ உள்ளிட்ட படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கொரியப் படமான ‘பாரஸைட்’ திரைப்படமும் இந்தப் போட்டியில் இருக்கிறது. ஒரு ஆசியப்படம் சிறந்த படங்களுக்கான பட்டியலில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கவுள்ள ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் நடக்கும் விருந்தில் பெரும்பாலும் இயற்கை உணவுகளையே வழங்கவுள்ளதாக ஆஸ்கர் விருதுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து விருதுக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலகம் முழுவதும் உள்ள கதைசொல்லிகளைக் கொண்ட ஆஸ்கர் குழு, கடந்த பல வருடங்களாக சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கார்பன் தடங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளையும் ஆஸ்கர் குழு மேற்கொண்டு வருகிறது'' என்று தெரிவித்துள்ளது.

ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் விருந்தில் இடம்பெறவுள்ள உணவுப் பட்டியலில் 70 சதவீத இயற்கை உணவுகளும், 30 சதவீத சைவ உணவுகளும் இடம்பெறும் என விருதுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in