

‘ஒன்ஸ் அபான் எ டைம் இன்... ஹாலிவுட்’ படத்தைத் தொடர்ந்து ‘ஜோக்கர்’ திரைப்படமும் மீண்டும் இந்தியாவில் வெளியாகவுள்ளது.
டிசி காமிக்ஸ் வில்லனான ஜோக்கர் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘ஜோக்கர்’. ஹாக்கின் ஃபீனிக்ஸ் நடித்த இப்படத்தை டோட் பிலிப்ஸ் இயக்கியிருந்தார். படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜோக்கராக நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸுக்கு பத்திரிகைகளிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. ஹாக்கின் ஃபீனிக்ஸுக்கு சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் ஆர் ரேட்டட் படமான ‘ஜோக்கர்’ உலகமெங்கும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்தது. இதுவரை வெளியான ஆர் ரேட்டட் படங்களில் அதிக தொகை வசூலித்த படம் இதுவே. இப்படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ‘ஜோக்கர்’ திரைப்படத்தை இந்தியாவில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் ‘ஜோக்கர்’ திரைப்படம் சென்னை, கோயம்புத்தூர், மும்பை, டெல்லி, பெங்களூரு, நொய்டா, கொல்கத்தா, புனே, எர்ணாகுளம், ஹைதராபாத், உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மீண்டும் திரையிடப்படவுள்ளது.
இதே போல க்வெண்டின் டாரண்டினோ இயக்கிய ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன்... ஹாலிவுட்’ திரைப்படமும் இந்தியாவிம் வரும் பிப். 14 அன்று வெளியாகிறது.