52 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட பமீலா ஆண்டர்சன்

52 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட பமீலா ஆண்டர்சன்
Updated on
1 min read

நடிகை பமீலா ஆண்டர்சன் தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவருக்கும் இது ஐந்தாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகக் காதலித்து வரும் இருவரும் ஜனவரி 30ஆம் தேதி அன்று, மலிபுவில் திருமணம் செய்து கொண்டதாக ஹாலிவுட் ரிப்போர்ட்டர் பத்திரிகை தெரிவிக்கிறது. சில காலம் பிரிந்திருந்த 52 வயதான பமீலாவும் 74 வயதான பீட்டர்ஸும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒன்றாகச் சேர்ந்ததை ரகசியமாகவே வைத்திருந்ததாகத் தெரிகிறது.

எ ஸ்டார் இஸ் பார்ன், சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ், வைல்ட் வைல்ட் வெஸ்ட் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் பீட்டர்ஸ். பமீலா குறித்து பேசுகையில், "பமீலா ஒரு நடிகையாக இன்னும் தனது முழு திறமையை வெளிப்படுத்தவில்லை. இன்னும் அவர் மிளிரவேண்டும். நாம் கண்ணால் பார்க்கும் விஷயங்களை விட அவரிடம் நிறையத் திறமை இருக்கிறது. இல்லையென்றால் நான் அவரை இவ்வளவு விரும்ப மாட்டேன். நிறைய அழகான பெண்கள் இருக்கிறார்கள். என்னால் யாரையும் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் 35 வருடங்களாக நான் பமீலா தான் வேண்டும் என்றிருக்கிறேன். அவர் எனக்கு ஊக்கம் தருகிறார். நான் அவரைக் காக்கிறேன், அவர் எப்படி நடத்தப்படுவதற்கு உரியவரோ அப்படி நடத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

பமீலா பேசுகையில், "ஜான் தான் ஹாலிவுட்டின் நிஜமான பேட்பாய். யாரையும் ஒப்பிடமுடியாது. நான் அவரை ஒரு குடும்பம் போல ஆழமாக நேசிக்கிறேன். அவரது வாழ்க்கை முறை என்னைப் பயமுறுத்தியதுண்டு. ஆனால் அவர் என்றும் எனக்காக இருந்திருக்கிறார். என்னை ஏமாற்றியதில்லை. இப்போது நான் தயாராக இருக்கிறேன், அவரும் தயார். நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறோம், மதிக்கிறோம். நிபந்தனையின்றி விரும்புகிறோம். நான் அதிர்ஷ்டம் செய்தவள். கடவுள் திட்டம் கொண்டவர் என்பதற்கான அத்தாட்சி இது" என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in