

அதிகார மீறல் எங்கு நடந்தாலும் குரல் கொடுப்பேன் என்று நடிகர் ராபர்ட் டி நிரோ கூறியுள்ளார்.
ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் அவார்ட்ஸ் விருது நிகழ்ச்சி அண்மையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் 'ஐரிஷ்மேன்' திரைப்படத்தில் நடித்திருந்த ராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவருக்கு நடிகர் லியோர்னாடோ டிகாப்ரியோ வழங்கினார்.
விருதைப் பெற்றுக் கொண்ட ராபர்ட் டி நிரோ மேடையில் பேசியதாவது:
''சமீபகாலங்களில் போராடும் குழுக்களுக்கு எதிரான போக்கு அதிகரித்துள்ளது. குழுக்களை ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள் கட்டுப்படியாகக்கூடிய பராமரிப்புச் சட்டம், சமமான வரிகள், மனிதாபிமானத்தோடு கூடிய குடியேற்ற விதிமுறைகள், பாதுகாப்பான சூழல், துப்பாக்கிளுக்குக் கட்டுப்பாடு மற்றும் நியாயமான ஊதியங்கள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றையும் ஆதரிக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது. நாம் அவர்களுக்கு நமது ஆதரவையும் ஓட்டுகளையும் அளிக்க வேண்டும்.
சிலர் என்னிடம் அரசியல் பற்றிப் பேச வேண்டாமே என்று சொல்கின்றனர். ஆனால், நாம் இப்போது இருக்கும் சூழல் மிகவும் மோசமானதாக இருக்கிறது. இது எனக்கும் என்னைப் போன்ற பலருக்கும் மிகுந்த கவலையைத் தருகிறது. இதனால் நான் பேசியாக வேண்டியிருக்கிறது. ஒரு குடிமகனாக என்னுடைய கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உள்ளது. அதிகார மீறல் எங்கு நடந்தாலும் அதற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்''.
இவ்வாறு ராபர்ட் டி நிரோ பேசினார்.
சமீபத்தில் வெளியான 'தி ஐரிஷ்மேன்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் மார்ட்டின் ஸ்கோர்செஸி இயக்கத்தில் ராபர்ட் டி நிரோ நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.