

தென் கொரிய இயக்குநர் பாங் ஜூன் ஹோ, தான் மார்வல் படங்களை இயக்குவது சாத்தியப்படாது என்று கூறியுள்ளார்.
'மெமரீஸ் ஆஃப் மர்டர்', 'ஸ்னோபியர்சர்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் பாங் ஜூன் ஹோ. இவரது 'பாரஸைட்' திரைப்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதை வென்றதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை அள்ளி வருகிறது.
ஆஸ்கரில் சிறந்த அயல்நாட்டு மொழி திரைப்படம், சிறந்த திரைப்படம் என இரண்டு பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு பிரிவுகளில் 'பாரஸைட்' பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்தியாவில் ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான சிறு திரைப்பட இயக்குநர்களை வளைத்துப் போடும் வழக்கத்தை மார்வல் நிறுவனம் பின்பற்றி வருகிறது. ஆனால் தான் மார்வல் படங்களை இயக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் பாங் ஜூன் ஹோ.
"என்னைப் போன்ற இயக்குநரை மார்வல் விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர்களிடமிருந்து நான் எந்தவித வாய்ப்பையும் எதிர்பார்க்கவும் இல்லை. ஜேம்ஸ் கன், ஜேம்ஸ் மான்கோல்ட் போன்றவர்களின் படங்கள் எனக்குப் பிடித்தவை. அப்படியான படங்களைக் கையாள சிறந்த இயக்குநர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
திரைத்துறை பார்க்கச் சிக்கலாகத் தெரியலாம். ஆனால், இயக்குநர்களுக்கு அவை எளிதானவையே. நாம் எதில் சிறந்து இருக்கிறோமோ அதைச் செய்வதே சிறப்பு. அதனால் மார்வலும் நானும் ஒருவருக்கொருவர் பொருத்தமாக இருக்க மாட்டோம். இதை என் உள்ளுணர்வு எனக்குச் சொல்கிறது.
மேலும், எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு பிரச்சினை இருக்கிறது. சூப்பர் ஹீரோ படங்களுக்குப் பின்னால் இருக்கும் படைப்பாற்றலை நான் மதிக்கிறேன். ஆனால் நிஜத்திலும் சரி, படங்களிலும் சரி, மக்கள் இறுக்கமான உடைகளை அணிவது எனக்குச் சுத்தமாக ஒத்துவராது. நான் அப்படி ஒரு உடை அணிய மாட்டேன். அப்படியான உடை அணிபவரைப் பார்ப்பதே எனக்குக் கடினமாக இருக்கும். அவர்களை எங்கு பார்ப்பதென்றே எனக்குத் தெரியாது. எனக்கு மூச்சடைக்கும்.
பெரும்பாலான சூப்பர் ஹீரோக்கள் இறுக்கமான உடை அணிகிறார்கள். எனவே என்னால் அப்படி ஒரு படத்தை இயக்க முடியாது. அப்படி ஒரு பட வாய்ப்பை யாரும் எனக்குத் தரவும் மாட்டார்கள். தாராளமாக உடை அணியும் சூப்பர் ஹீரோ இருந்தால் ஒருவேளை நான் அதை (இயக்க) முயலலாம் என்று நினைக்கிறேன்".
இவ்வாறு பாங் ஜூன் ஹோ கூறியுள்ளார்.