

1917 ஆம் ஆண்டு உலகப் போர் உச்சத்தில் இருந்த சமயம், பிரான்ஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் முகாமிட்டிருந்த ஜெர்மன் படை திடீரென பின்வாங்குகிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் படையின் ஒரு பகுதி முன்னேறிச் சென்று ஜெர்மன் படையைத் தாக்கத் திட்டமிடுகிறது.
இதற்கிடையே வேறொரு பகுதியில் இருக்கும் பிரிட்டிஷ் படையின் ஜெனரல் எரின்மோருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைக்கிறது. ஜெர்மன் படை பின்வாங்கியதே ஒரு போர்த் தந்திரம். பிரிட்டிஷ் படையை அவர்களின் பகுதிக்கு வரவைத்து அழிக்க அவர்கள் போட்ட திட்டம் என்பதே அந்த ரகசியச் செய்தி. அந்தப் பகுதியில் உள்ள தொலைபேசி இணைப்புகளை ஜெர்மன் படையினர் சேதப்படுத்தி விட்டதால் இந்தச் செய்தியை ஜெர்மன் படையினரோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் படையிடம் கொண்டு சேர்த்துவிட்டு தாக்குதலை நிறுத்தச் சொல்லுமாறு இரண்டு இளம் வீரர்களுக்கு உத்தரவிடுகிறார் எரின்மோர். அந்த இளம் வீரர்களின் ஒருவனான ப்ளேக்கின் சகோதரனும் அந்தப் படையில் ஒருவனாக இருப்பதால் அவர்களால் அந்த உத்தரவை மறுக்க முடியவில்லை. அந்தச் செய்தியை பிரிட்டிஷ் படையினரிடம் அந்த இளம் வீரர்கள் கொண்டு சேர்த்தார்களா? போர் தடுத்து நிறுத்தப்பட்டதா? என்பதே '1917' படத்தின் கதை.
முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் படைப்பிரிவுகளிடையே செய்திகளைக் கொண்டு செல்லும் தூதுவராகச் செயல்பட்ட தனது தாத்தா ஆல்ஃப்ரெட் மென்டஸ் சிறுவயதில் தன்னிடம் கூறிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சாம் மென்டஸ்.
ஆங்கிலத்தில் இப்படத்தை 'ஒன் ஷாட் மூவி’ என்று குறிப்பிடுகின்றனர். ஒன் ஷாட் என்றதும் முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்று நினைத்து விட வேண்டாம். முழுப் படத்தையும் தனித் தனி ஷாட்களாக எடுத்திருந்தாலும் அவை திரையில் பார்க்கும்போது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது போன்ற உணர்வைத் தருகிறது. அதற்கேற்றார் போல் ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியுள்ளனர். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நீளமான பல காட்சிகளும் படத்தில் உண்டு.
படத்தின் ஆரம்பத்தில் அந்த இளம் வீரர்களோடு பயணிக்கத் தொடங்கும் கேமரா படம் முடியும் வரை எங்கும் நிற்கவில்லை. அவர்கள் ஓடினால் கேமராவும் ஓடுகிறது, அவர்கள் தண்ணீரில் குதித்தால் கேமராவும் தண்ணீரில் குதிக்கிறது. அவர்கள் தண்ணீருக்குள் தத்தளிக்கும் அந்தக் காட்சியில் நாமும் தத்தளிப்பது போன்று உணர வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ். இந்த ஆண்டின் சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது கிடைக்கலாம்.
ஒவ்வொரு காட்சியிலும் படக்குழுவினரின் மெனக்கிடல் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியின் பின்னணியிலும் ஏராளமான துணை நடிகர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சொதப்பினால் நீளமான அந்தக் காட்சியை மறுபடியும் எடுத்தாக வேண்டும். ஆனால் அது போன்ற ஒரு சிறிய பிசிறு, ஒரு காட்சியில் கூட தென்படாத அளவுக்கு படக்குழுவினர் உழைத்துள்ளனர்.
பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி பாடம் எடுக்காமல், 1000 வயலின்களை இசைக்கவிட்டு சோக கீதம் பிழியாமல் போரின் குரூரத்தையும், அதனால் ஏற்படும் இழப்புகளையும், வலிகளையும் காட்சியமைப்பின் மூலம் நம்முள் கடத்தியிருக்கிறார் இயக்குநர் சாம் மென்டஸ்.
இளம் வீரர்களாக நடித்திருக்கும் ஜார்ஜ் மெக்கே, டீன் சார்லஸ் சாப்மேன் ஆகிய இருவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நம்மைக் கலங்க வைக்கும் பல காட்சிகள் படத்தில் உண்டு. படத்தின் ஆரம்பக் காட்சி முதல் பில்டப் கொடுக்கப்படும் பெனடிக்ட் கம்பெர்பேட்ச் படத்தில் ஒரு சில நொடிகளே வருவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம்.
இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் எப்படி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. படத்தில் அவ்வளவு ரத்தம். ஒரு காட்சியில் இறந்து கிடக்கும் ஒரு போர்வீரனின் உடலிலிருக்கும் காயத்தை எலி ஒன்று தின்று கொண்டிருக்கிறது. இது போன்ற ஏகப்பட்ட காட்சிகள் படத்தில் உண்டு.
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாக இருப்பதால் பார்ப்பவருக்கு சலிப்பு ஏற்பட்டு விடும் அபாயம் உண்டு. ஆனால் படம் தொடங்கியது முதல் முடியும் ஒரு காட்சியில் கூட நம்மை வேறு எதைப் பற்றி யோசிக்க விடாமல் செய்ததே இயக்குநரின் வெற்றி.
இப்படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.