

ஹாலிவுட் நடிகை ஜேன் ஃபோண்டா என்பவர், வாஷிங்டன் டிசி நகரில், காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கை கோரி போராட்டம் ஒன்றை நடத்தினார். இதில் ஜோக்கர் பட நாயகன் ஹாக்கின் ஃபீனிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
ஃபீனிக்ஸ் பேசுவதற்கு முன் இன்று வாழும் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று அவரை ரசிகர்களிடம் அறிமுகம் செய்து பேச அழைத்தார் ஜேன் ஃபோண்டா. ஃபீனிக்ஸ் அவரது சிறிய உரையில், காலநிலை மாற்றத்துக்கு மூன்றாவது முக்கியக் காரணமாக இருக்கும் இறைச்சி மற்றும் பால் துறைகளை குறிப்பிட்டுப் பேசினார்.
"சில நேரங்களில் இந்த கால நிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் என்ன செய்வது என்று யோசிப்போம். அப்படி நீங்கள் செய்யவேண்டுமென்றால் நீங்கள் எதை சாப்பிடுகிறீர்கள் என்பது பற்றிச் சரியாகத் தேர்வு செய்வதன் மூலம் செய்யலாம். சில விஷயங்களை என்னால் தவிர்க்க முடியாது. இங்கு நான் விமானத்தில் தான் வந்தேன். ஆனால் என்னால் என் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியும்" என்று கூறினார்.
போராட்டத்தில் பங்கேற்ற நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவருமே கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 147 பேரை கைது செய்ததாக காவல்துறை அறிவித்துள்ளது. இவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக கோல்டன் க்ளோப் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற ஹாக்கின் ஃபீனிக்ஸ், அந்த மேடையிலும் காலநிலை மாற்றத்தைப் பற்றி தனது விருது ஏற்புரையில் பேசியது நினைவுகூரத்தக்கது.