

ஹாலிவுட் நடிகை ஜேன் ஃபோண்டா என்பவர், வாஷிங்டன் டிசி நகரில், காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கை கோரி போராட்டம் ஒன்றை நடத்தினார். இதில் ’ஜோக்கர்’ பட நாயகன் ஹாக்கின் ஃபீனிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் மார்டின் ஷீன், தனது உரையின் போது, கூடியிருந்தவர்கள் முன் ரவீந்திரநாத் தாகூரின் கவிதை ஒன்றை வாசித்தார்.
அவர் பேசுகையில், "இந்த உலகம் பெண்களால் காப்பாற்றப்படும் என்பது தெளிவாகிறது. நல்ல வேளை அவர்கள் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக உள்ளது" என்று குறிப்பிட்டார். மேலும் தாகூரின் 'இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ' என்று ஆரம்பிக்கும் கவிதையை வாசித்துக் காட்டி கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினார். மார்டின் ஷீனின் பேச்சுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அனைவரும் பலமாகக் கைத்தட்டி ஷீனின் உரையை வரவேற்றார்கள்.
போராட்டத்தில் பங்கேற்ற நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவருமே கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 147 பேரை கைது செய்ததாக காவல்துறை அறிவித்துள்ளது. இவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.