

உலகப் போரை அடிப்படையாகக் கொண்டு ஹாலிவுட்டில் நூற்றுக்கணக்கான படங்கள் வந்துவிட்டாலும் அவற்றுக்கான வரவேற்பு என்றுமே குறைவதில்லை. இதற்கு 'ஷிண்டர்ஸ் லிஸ்ட்’, 'சேவிங் ப்ரைவேட் ரையான்’, 'தி பியானிஸ்ட்', 'டன்கிர்க்’ உள்ளிட்ட பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ஸ்பீல்பெர்க் தொடங்கி நோலன் வரை பலரும் மென்று துப்பிய களம் அது. ஆனால், அந்தக் களத்தை வைத்துக் கொண்டு அரைத்த மாவையே அரைக்காமல் ஒரு புது முயற்சியை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சாம் மென்டஸ்.
அமெரிக்கன் பியூட்டி, ஜேம்ஸ் பாண்ட் படங்களான 'ஸ்கைஃபால்’, ‘ஸ்பெக்ட்ரே’ உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் சாம் மென்டஸ். முதலாம் உலகப்போரில் செய்திகளைக் கொண்டு செல்லும் தூதுவராகச் செயல்பட்ட தனது தாத்தா ஆல்ஃப்ரெட் மென்டஸ் சிறுவயதில் தன்னிடம் கூறிய ஒரு கதையைப் படமாக உருவாக்க நினைக்கிறார். ஸ்பெக்ட்ரே படம் எடுத்துக் கொண்டிருந்தபோதே இதற்கான எண்ணம் வலுப்பெற்று விட்டாலும் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார் சாம் மென்டஸ். பின்னர் ஜார்ஜ் மெக்கே, டீன் சார்லஸ் சாப்மேன், பெனடிக்ட் கும்பெர்பேட்ச், உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது.
படத்தின் பெயர் '1917'
முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த இரண்டு இளம் வீரர்கள், மற்ற பகுதிகளில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கும் முக்கியச் செய்திகளைக் கொண்டு செல்கின்றனர். வழியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், சண்டைகள், எதிரிகளின் தாக்குதல் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது ‘1917’.
படம் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவில் வெளியாகி பத்திரிகை மற்றும் விமர்சகர்களின் பாராட்டு மழையில் '1917' நனைந்து வருகிறது. இது தவிர இந்த ஆண்டின் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான கோல்டன் குளோப் விருதையும் தட்டிச் சென்றுள்ளது.
அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் படத்தில்?
பல ஆங்கிலப் பத்திரிகைகள் இந்தப் படத்தை ’ஒன் ஷாட் எ பிக் வார் மூவி’ என்று குறிப்பிட்டுள்ளன. ஒன் ஷாட் என்றதும் முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்று நினைத்து விட வேண்டாம். முழுப் படத்தையும் தனித் தனி ஷாட்களாக எடுத்திருந்தாலும் அவை திரையில் பார்க்கும்போது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது போன்ற உணர்வைத் தரும். அதற்கேற்றார் போல் ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியுள்ளனர். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நீளமான பல காட்சிகளும் படத்தில் உண்டு.
‘1917’ படம் உருவான விதம் பற்றி இயக்குநர் சாம் மென்டஸ் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
'' ‘ஸ்பெக்ட்ரே’ படத்துக்குப் பிறகு இதற்கு முன்பு செய்யாத ஒரு விஷயத்தை முயற்சி செய்யவேண்டும் என்று விரும்பினேன். முதலாம் உலகப் போரில் பங்கேற்ற என் தாத்தா ஒவ்வொரு பகுதிக்கும் செய்திகளைக் கொண்டு செல்லும் தூதுவராக இருந்தார். இந்தக் கருவை வைத்து ஒரு கதையை உருவாக்கினேன்.
ஆனால், இது ஒரு சராசரிப் படமாக இல்லாமல் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்க வேண்டும் எனவும் படத்தில் வரும் கதாபாத்திரங்களோடு பார்வையாளர்களும் பயணம் செய்ய வேண்டும் எனவும் விரும்பினேன். எனவே, இதை பல ஷாட்களில் எடுத்திருந்தாலும் படம் பார்க்கும்போது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது போன்ற உணர்வு எழும். இதற்காக ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நடிகர்கள் செய்யும் எல்லா விஷயத்தையும் ஒளிப்பதிவாளரும் செய்ய வேண்டியிருந்தது.
ஒரு சராசரிப் படத்தை எடுப்பதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒவ்வொரு காட்சி எடுப்பதற்கு முன்னால் மிகவும் கவனமாகத் திட்டமிடல் வேண்டும். ஏனெனில் ஒரு 9 நிமிடக் காட்சியை எடுக்கும்போது அதில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும் மீண்டும் முதலிலிருந்து எடுக்க வேண்டும்.”
இவ்வாறு சாம் மென்டஸ் கூறினார்.
‘1917’ படம் இந்தியாவில் ஜனவரி 17-ம் தேதி வெளியாகிறது.