Published : 10 Jan 2020 02:00 PM
Last Updated : 10 Jan 2020 02:00 PM

நோய்த்தொற்றால் ஜஸ்டின் பீபர் பாதிப்பு: இன்ஸ்டாகிராமில் உருக்கம்

கனடா நாட்டைச் சேர்ந்த பாடகரும், சர்வதேச பிரபலமுமான ஜஸ்டின் பீபர், தனக்கு லைம் நோய் எனப்படும் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிலந்தி போல வடிவத்தில் இருக்கும் உண்ணிகளால் இந்த லைம் நோய்த்தொற்று பரவுகிறது. வருடத்துக்கு 3 லட்சம் அமெரிக்கர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். சரியான சிகிச்சை இல்லாமல் போனால் இந்தத் தொற்று மூட்டு, இதயம் மற்றும் நரம்பு மண்டலத்திலும் பரவி வலி, வீக்கத்தை ஏற்படுத்தும்.

இதுபற்றி முதல் முறையாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜஸ்டின் பீபர். அதில், "ஜஸ்டின் பீபர் பார்க்க மோசமாக இருக்கிறார். போதைப் பொருள் எடுத்துக் கொள்கிறார் என்று பலர் சொன்ன அதே வேளையில், எனக்குச் சமீபத்தில் லைம் நோய் இருப்பது தெரியவந்ததைப் பற்றி யாரும் உணரவில்லை. அது மட்டுமல்ல எனது தோல், மூளைச் செயல்பாடு, ஆற்றல், மொத்த ஆரோக்கியத்தையும் பாதித்த காய்ச்சலும் வந்தது.

விரைவில் நான் யூடியூபில் வெளியிடவிருக்கும் வீடியோ தொடரில் இது குறித்த விளக்கங்கள் இருக்கும். நான் எதையெல்லாம் போராடிக் கடந்து வருகிறேன் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். கடந்த சில வருடங்கள் மோசமாக இருந்தன. ஆனால் இதுவரை தீர்க்க முடியாமல் இருந்த இந்த நோயைத் தீர்க்கும் சரியான சிகிச்சையை எடுத்து வருகிறேன். மீண்டும் மீண்டு வருவேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 25 வயதான பீபர் கடந்த வருடம் தான் அமெரிக்க மாடல் ஹெய்லி பால்ட்வின் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x