கெட்ட வார்த்தைகள், ஹாலிவுட்டுக்கு அறிவுரை: 'ஜோக்கர்' நடிகரின் பரபரப்புப் பேச்சு

கெட்ட வார்த்தைகள், ஹாலிவுட்டுக்கு அறிவுரை: 'ஜோக்கர்' நடிகரின் பரபரப்புப் பேச்சு
Updated on
1 min read

கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழாவில் நடிகர் ஹாக்கின் ஃபீனிக்ஸின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

கோல்டன் க்ளோப் 2020 விருது வழங்கு விழா கலிஃபோர்னியாவில் நடந்து முடிந்தது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை 'ஜோக்கர்' படத்தில் நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸ் வென்றார்.

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட பின் அவர் பேசும்போது, விழாவில் அனைவருக்கும் வீகன் (சைவ, பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் கலக்காத) உணவை வழங்கியதற்கு விழா ஏற்பாட்டாளருக்கு நன்றி சொல்லிவிட்டு, "விலங்குகள் விவசாயத்துக்கும் காலநிலை மாற்றத்துக்குமான தொடர்பை அங்கீகரித்ததற்கு நன்றி. இன்றிரவு தாவரங்கள் அடிப்படையிலான உணவுக்கு ஏற்பாடு செய்தது மிக தைரியமான முடிவு" என்று தனது உரையைத் தொடங்கினார்.

ஃபீனிக்ஸ் மேலும் பேசியதாவது:

"ஆஸ்திரேலியா (காட்டுத் தீ) பிரச்சினைக்காக பலரும் தங்களின் பிரார்த்தனைகளைச் சொன்னது நன்றாக இருந்தது. ஆனால் நாம் இதைத் தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் இல்லையா? நான் எல்லா நேரமும் நல்லொழுக்கம் இருப்பவனாக இருந்ததில்லை. உங்கள் அனைவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். அதை சரியாகக் கற்க எனக்கு பல்வேறு வாய்ப்புகளைத் தந்திருக்கிறீர்கள். அதற்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன். நாமும் சில நேரம் பொறுப்பை நம் கையில் எடுத்துக் கொண்டு நம் வாழ்க்கையில் சில மாற்றங்கள், சில தியாகங்களைச் செய்ய வேண்டும். விருது வென்றதற்காக நமது தனிப்பட்ட விமானத்தை எடுத்துக் கொண்டு சுற்றுலா செல்லாமல் இருக்கலாம். நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன். நீங்களும் செய்வீர்கள் என நம்புகிறேன். என்னைப் பொறுத்துக் கொண்டதற்கு நன்றி".

இவ்வாறு ஹாக்கின் ஃபீனிக்ஸ் பேசினார்.

இவரது பேச்சில் இருந்த கெட்ட வார்த்தைகளின் ஒலி தொலைக்காட்சி ஒளிபரப்பில் நீக்கப்பட்டன. காலநிலை மாற்றம் பற்றி பேசியது, அதற்காக பொறுப்புணர்வுடன் தனியார் விமானத்தில் பறக்காதீர்கள் என சக நட்சத்திரங்களிடம் கேட்டது என ஃபீனிக்ஸின் இந்தப் பேச்சு இணையத்தில் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்த விழாவில் ஃபீனிக்ஸ் உரை மட்டுமல்ல, மிஷல் வில்லியம்ஸ், ஜெனிஃபர் அனிஸ்டன், எலன் டிஜெனரஸ் என பல நட்சத்திரங்களின் விருது ஏற்பு உரையிலும் சமூக அக்கறை, அரசியல் என கலந்திருந்த கருத்துகள், ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

'ஜோக்கர்' கதாபாத்திரத்தில் நடித்து விருது வென்ற இரண்டாவது நடிகர் ஹாக்கின் ஃபீனிக்ஸ். இதற்கு முன் 'டார்க் நைட்' படத்தில் ஜோக்கராக நடித்த ஹீத் லெட்ஜருக்கும் கோல்டன் க்ளோப் விருது வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in