

'அக்வாமேன்' நாயகன் ஜேஸன் மோமோ, 'ஜுராசிக் வேர்ல்ட்' நாயகன் கிறிஸ் ப்ராட்டிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’, 'ஜுராசிக் வேர்ல்ட்’ படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் கிறிஸ் ப்ராட். சமீபத்தில் அமேசான் விளம்பரத்துக்காக ஒரு முறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் பாட்டிலுடன் இருந்த புகைப்படத்தை கிறிஸ் ப்ராட் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இதற்கு அங்கேயே கருத்து பகிர்ந்த ஜேஸன் மோமோ, "சகோதரா எனக்கு உன்னைப் பிடிக்கும். ஆனால் அது என்ன வாட்டர் பாட்டில், ஒரு முறை பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் வேண்டாம்" என்று குறிப்பிட்டிருந்தார்
இந்தக் கருத்து வைரலாகி பலரும் கிறிஸ் ப்ராட்டை சாட ஆரம்பித்துவிட்டனர். இதை சற்றும் எதிர்பார்த்திராத ஜேஸன் மோமோ தற்போது இதற்கு வருத்தம் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தானும், தனது இரண்டு மகள்களும் கிறிஸ் ப்ராட்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஜேஸன் மோமோ, "இது மோசமான எதிர்வினைகளைச் சந்தித்ததற்கு என் வருத்தங்கள். இது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சகோதரா எனக்கும் என் குழந்தைகளுக்கும் உன்னையும் உன் திரைப்படங்களையும் எவ்வளவு பிடிக்கும் என்று தெரியும். இந்த ஒரு முறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக்கினால் வரும் தீமைகள் குறித்து நான் தீவிரமாக யோசிப்பவன்.
இந்த ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் நிறுத்தப்பட வேண்டும். மீண்டும் பயன்படுத்தும் வகையில் இருக்கும் வாட்டர் பாட்டில்களை நீ அமேசானுக்காக உருவாக்கினால் அதை நாங்கள் அனைவரும் வாங்குவோம். நீ பலருக்கு உந்துதலாக இருக்கிறாய். நானும் அதில் ஒருவன். நான் உனக்கு ஒரு பெட்டி மானானாலுவை அனுப்புகிறேன். உனக்கு என் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மானானாலு ஜேஸன் மோமோவின் குடிநீர் தயாரிப்பு நிறுவனம். இதில் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் கேன்களில் குடிநீர் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது