

'நார்தல்ட்ரா’ எனப்படும் மந்திர சக்திகள் நிரம்பிய ஒரு காட்டைப் பற்றிய கதையை குழந்தைகளாக இருக்கும் அன்னா மற்றும் எல்சாவிடம் அவர்களின் தந்தையும் அரெண்டெல் நகர அரசருமான அக்னார் சொல்கிறார்.
அந்தக் காட்டுக்கும் அரெண்டெல் நகரத்துக்கும் இருந்த நெருங்கிய நட்பு பற்றியும், அந்தக் காட்டில் வசித்த மக்களுக்காக அக்னாரின் தந்தை கட்டிக்கொடுத்த பிரம்மாண்ட அணையைப் பற்றியும், பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால ’நார்தல்ட்ரா’ காடு மர்மப் புகையால சூழப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்.
அன்னா மற்றும் எல்சா இருவரும் பெரியவர்களாக வளர்கிறார்கள். எல்சாவுக்கு மர்மக்குரல் ஒன்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்தக் குரலுக்குப் பதிலளிக்க முயலும் எல்சா, எதேச்சையாக பஞ்ச பூதங்களை எழுப்பி விடுகிறாள். அவை ஒன்று சேர்ந்து அங்கிருக்கும் மக்கள் அனைவரையும் வெளியேற்றுவதற்கான முயற்சியில் இறங்குகின்றன.
அன்னா, எல்சா, பனிமனிதன் ஒலாஃப், கிரிஸ்டாஃப், ஆகிய நால்வரும் இந்த இயற்கை சீற்றங்களைச் சரிசெய்ய அந்த மர்மக் குரலைப் பின்தொடர்ந்து செல்கின்றனர்.
நால்வரும் மர்மக் குரல் வரும் இடத்தைக் கண்டுபிடித்தார்களா? அந்தக் குரலுக்கும் படத்தின் ஆரம்பத்தின் அரசர் சொன்ன கதைக்கும் என்ன தொடர்பு? ஐம்பூதங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதா? என்பதே ’ஃப்ரோஸன் 2’ படத்தின் கதை
’ஃப்ரோஸன்’ முதல் பாகத்திற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்து ’ஃப்ரோஸன் 2’ கதை தொடங்குகிறது. வழக்கமான டிஸ்னி படங்களில் இடம்பெறும் தத்ரூபமான அனிமேஷன், முதல் பாகத்தில் இருந்ததற்கும் இந்தப் படத்துக்கும் இடையிலான ஆண்டுகளைக் கணக்கிட்டு கதாபாத்திரங்களின் முகங்களில் தெரியும் முதிர்வு, இசை, பாடல்கள், வசனங்கள் என அனைத்தும் தரம்.
ஆனால், முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பான திரைக்கதை இதில் இல்லை. அனிமேஷன், இசை, மற்ற தொழில்நுட்ப விஷயங்களில் மெனக்கெட்டவர்கள் திரைக்கதையை மிகவும் மேம்போக்காக அமைத்ததால் பல காட்சிகள் மனதில் ஒட்டாமல் செல்கின்றன. முதல் பாகத்தின் பலமே அதில் இருந்த உணர்வுபபூர்வமான காட்சிகள்தான். அதுபோன்ற ஒரு காட்சி கூட இதில் இல்லாதது படத்தின் பெரிய பலவீனம்.
பனிமனிதன் ஓலாஃப் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தன. நகைச்சுவை வசனங்களுக்கும், முதல் பாகத்தின் கதையை சுருக்கமாக ஓலாஃப் சொல்லும் காட்சியிலும் அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.
முதல் பாகத்தில் இருந்த க்ளைமாக்ஸ் காட்சி போன்றே இதிலும் இருந்தாலும் அதில் இருந்த பரபரப்போ விறுவிறுப்போ இதில் இல்லை. ஏதோ கடமைக்கு படத்தை முடித்ததைப் போல இருந்தது. பாடல்கள் கேட்பதற்கு நன்றாகவே இருந்தாலும் அவை நிமிடத்திற்கு ஒன்று வருவது ரசிக்கும்படியாக இல்லை.
குழந்தைகளுக்காகவும், ஓலாஃப் வரும் காட்சிகளுக்காகவும், நல்ல 3டி அரங்கில் ஒருமுறை பார்க்கலாம்.