

மார்ட்டின் ஸ்கோர்செஸிக்கு சினிமா சொந்தமில்லை என அவெஞ்சர்ஸ் திரைப்பட இயக்குநர்களான ரூஸோ சகோதரர்கள் பதில் அளித்துள்ளனர்.
சூப்பர் ஹீரோ படங்கள் சினிமாவே அல்ல. அவை ஒரு தீம்பார்க் அனுபவம் போல மட்டுமே என ஹாலிவுட்டின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான மார்ட்டின் ஸ்கோர்செஸி சில வாரங்களுக்கு முன் விமர்சித்திருந்தார். அவரது கருத்து பரபரப்பாகப் பேசப்பட்டது. தொடர்ந்து நியூயார்க் டைம்ஸ் இதழில் தனது கருத்தை இன்னும் அழுத்தமாக்க, ஒரு கட்டுரை எழுதினார்.
இதைத் தொடர்ந்து ஸ்கோர்செஸியின் கருத்துகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்துள்ளன. தற்போது கேப்டன் அமெரிக்கா, விண்டர் சோல்ஜர், சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் ஸ்கோர்செஸியின் கருத்துக்குப் பதில் அளித்துள்ளனர்.
ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு இவர்கள் அளித்துள்ள பேட்டியில், "சினிமா என்பது மக்கள் எல்லோரும் ஒன்றாக வந்து உணர்ச்சிகரமான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாகவே நாங்கள் சினிமாவைப் பார்க்கிறோம். படத்தின் வசூலை (சாதனையை) பார்க்கும் போது அதைப் பொருளாதார வெற்றியாகப் பார்க்கவில்லை. உணர்ச்சிகரமான வெற்றியாகப் பார்க்கிறோம். சர்வதேச அளவில் ரசிகர்களிடம், இதற்கு முன் இல்லாத அளவு தாக்கத்தை இந்தப் படங்கள் ஏற்படுத்தியுள்ளன. மேலும் இந்தப் படங்களை அவர் பார்க்காதபோது (எங்கள்) சினிமா பற்றி அவரிடம் பேசுவது சவாலாக இருக்கும்.
எப்படி இருந்தாலும், நாங்கள் இரண்டு நபர்கள். க்ளீவ்லேண்ட், ஒஹையோவிலிருந்து வந்திருக்கிறோம். சினிமா என்பது நியூயார்க்கில் பயன்படுத்தப்படும் சொல். க்ளீவ்லேண்டில் அதை நாங்கள் மூவீஸ் என்போம். சினிமா யாருக்கும் சொந்தமல்ல. எங்களுக்கும் சொந்தமல்ல. ஸ்கோர்செஸிக்கும் சொந்தமல்ல" என்று தெரிவித்துள்ளனர்.