

1955ல் மறைந்த ஹாலிவுட் நடிகர் ஒருவரை டிஜிட்டல் முறையில் மீண்டும் திரைக்குக் கொண்டு வரும் முயற்சிக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் டீன். ரெபல் வித்தவுட் எ காஸ் உள்ளிட்ட 3 படங்களில் மட்டுமே நடித்தவர். மிகப்பெரிய நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது தனது 24 வயதில் ஒரு கார் விபத்தில் துரதிர்ஷ்டவசமாகக் காலமானார்.
தற்போது ஜேம்ஸ் டீனின் குடும்பத்தினரிடம் உரிய அனுமதி பெற்று, மேஜிக் சிட்டி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் அவரது புகைப்படங்கள், நடித்த திரைப்படங்களின் காட்சிகளை வைத்து அவரை டிஜிட்டல் முறையில் மீண்டும் உருவாக்கி ஃபைண்டிங் ஜாக் என்ற படத்தில் நடிக்க வைக்கவுள்ளது.
ஜேம்ஸ் டீன் தரப்பில் இந்த முயற்சிக்கு வரவேற்பு இருந்தாலும் ஹாலிவுட் பிரபலங்கள் க்றிஸ் ஈவன்ஸ், நடிகர் ராபின் வில்லியம்ஸ் மகள் ஸெல்டா உள்ளிட்டோர் இதை விமர்சித்துள்ளனர்.
"இது மோசமான விஷயம். ஒரு புதிய பிகாசோ ஓவியத்தை கம்ப்யூட்டரை வரைய வைக்கலாம். ஜான் லென்னன் மெட்டுகளை அமைக்கச் சொல்லலாம். அடிப்படைப் புரிதலே இதில் இல்லாமல் போவது வெட்கக்கேடானது" என்று க்றிஸ் ஈவன்ஸ் ட்வீட் செய்துள்ளார்.
எதிர்காலத்தில் நடிப்பு என்பதற்கு இது தவறான முன்னுதாரணமாக இருக்கும் என மறைந்த நடிகர் ராபின் வில்லியம்ஸின் மகள் ஸெல்டா தெரிவித்துள்ளார்.
"அது ஜேம்ஸ் டீனாக இருக்கப்போவதில்லை. அவரது முகத்தை மோஷன் கேப்சரில் வைத்து வேறோரு பெயர் தெரியாத நடிகர் நடிக்கப்போகிறார். குரல் கொடுப்பார். யாருக்கு எந்த பெயர் போடுவார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். எப்படி நிஜமாக நடிப்பவர்களுக்குப் சம்பளம் தருவார்கள்? நடிப்பு என்ற கலையை எப்படி இந்த குழு இவ்வளவு சுமாராக புரிந்திருக்கிறது" என்று நடிகை ஜூலி ஆன் எமிரி கூறியுள்ளார்.
ஹாலிவுட்டில் கிராபிக்ஸ் மூலம் ஒரு நடிகரின் வயதைக் குறைத்துக் காட்டும் முறை பிரபலமடைந்து வருகிறது. சமீபத்தில் ஐரிஷ்மேன் படத்தில், ராபர்ட் டி நீரோ, அல் பசினோ உள்ளிட்ட நடிகர்கள் வயது குறைத்துக் காண்பிக்கப்பட்டது. வில் ஸ்மித் நடித்த ஜெமினை மேன் படத்தில் வில் ஸ்மித்தின் க்ளோனிங் கதாபாத்திரம் முழுக்க டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட மனித உருவமே.