

மறைந்த ஹாலிவுட் நடிகர் பால் வாக்கரின் மகளின் பிறந்த நாளுக்கு நடிகர் வின் டீசல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
’தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பால் வாக்கர். ஹாலிவுட்டின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான பால் வாக்கருக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஒரு கோர விபத்தில் எதிர்பாராதவிதமாக பால் வாக்கர் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ஹாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
’தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ்’ பட வரிசையில் இடம்பெற்ற 5 படங்களில் பால் வாக்கரோடு இணைந்து நடித்தவரும், பால் வாக்கரின் நெருங்கிய நண்பருமான வின் டீசல், பால் வாக்கரின் மகள் மெடோ ரெய்ன் வாக்கரின் பிறந்த நாளுக்கு உருக்கமான வாழ்த்து ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் பதிவில் வின் டீசல், மெடோ வாக்கருடன் தனது மகள் பால் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றி அதோடு ஒரு வாழ்த்துச் செய்தியையும் பகிர்ந்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில், ''நீ என்னவாக ஆகிக்கொண்டிருக்கிறாய் என்பதை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன் என்று சொல்லலாம். ஆனால் உண்மை என்னவெனில் உன்னை நினைத்து நான் எப்போதுமே பெருமை கொள்கிறேன். இது உனது 21-வது பிறந்த நாள். நீ இந்தப் பிறந்த நாளை ஜப்பானில் கொண்டாட விரும்பினாய் என்றும் எனக்குத் தெரியும். ஆனால், உன் குடும்பத்தினர் கேக்குடன் உனக்காகக் காத்திருக்கின்றனர். எனவே, விரைவாகச் செல். உன்னை மிகவும் நேசிக்கிறேன். அன்புடன் வின்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் மெடோ வாக்கர், “மிக்க நன்றி... உங்களையும் என்னுடைய குட்டி தேவதைகளையும் விரைவில் வந்து சந்திக்கிறேன்” என்று பதில் கூறியுள்ளார்.
இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வின் டீசல், மறைந்த தனது நண்பர் பால் வாக்கரின் நினைவாக தனது மகளுக்கு பால் என்று பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.