

லாஸ் ஏஞ்சல்ஸ்
ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நைஜீரிய படமான ’லயன்ஹார்ட்’ திரைப்படத்தை ஆஸ்கர் நடுவர் குழு தகுதி நீக்கம் செய்துள்ளது.
திரைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஒவ்வொரு வருடமும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு உலகம் முழுவதிலிருந்தும் படங்கள் விருதுக் குழுவுக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்தியாவின் சார்பில் இந்த ஆண்டு ரன்வீர் சிங் நடித்த ’கல்லிபாய்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நைஜீரியா நாட்டின் சார்பில் ஜெனிவீவ் நாட்ஜி இயக்கிய ’லயன்ஹார்ட்’ திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
சிறந்த வெளிநாட்டுப் பட விருதுக்கு அனுப்பப்படும் படங்களில் ஆங்கில உரையாடல்கள் அதிகமாக இடம்பெற்றிருக்கக் கூடாது என்பது முக்கியமான விதி. ஆனால் ‘லயன்ஹார்ட்’ திரைப்படத்தில் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே இக்போ மொழி இடம்பெற்றிருப்பதாகவும், மீதமுள்ள 95 நிமிடங்களும் ஆங்கில உரையாடல்களே இடம்பெற்றிருப்பதாகவும் கூறி இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இருந்து நடுவர் குழு நீக்கியுள்ளது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம் என்று ஆஸ்கர் குழுவினருக்குத் தெரியாதா? அல்லது நைஜீரியப் படங்கள் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லையா? என்று இணையத்தில் ரசிகர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.