

ஒரு தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது நிருபர் கேட்ட ஒரு கேள்வியால கோபமடைந்த டேனியல் க்ரெய்க், அவருக்குக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
1953 ஆம் ஆண்டு இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். 1962 ஆம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 24 படங்கள் வெளியாகியுள்ளன. வியக்கவைக்கும் ஆக்ஷன் காட்சிகள், புதிய தொழில்நுட்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட இப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.
கடைசியாக வெளியான நான்கு பாண்ட் படங்களில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் நடித்து வருகிறார். அடுத்ததாக வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை', ஜேம்ஸ் பாண்டாக க்ரெய்க் நடிக்கும் கடைசிப் படம். இந்தப் படத்தை கேரி ஜோஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் கேரி ஜோஜியுடன் இணைந்து நடிகையும் பிரபல பெண் எழுத்தாளுருமான ஃபீப் வாலர் பிரிட்ஜ் எழுதி வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் நாளிதழுக்கு டேனியல் க்ரெய்க் பேட்டியளித்தார். அப்போது பேட்டி எடுத்த நிருபர், டேனியல் க்ரெய்க்கிடம் “பிரபல பெண் எழுத்தாளரான ஃபீப் வாலர் பிரிட்ஜை படத்தினுள் கொண்டுவந்திருப்பது பெண்களுக்கு நாங்கள் சமவாய்ப்பு தருகிறோம் என்று காட்டிக் கொள்வதற்காகவா?’’ என்று கேட்டார்.
இந்தக் கேள்வியால் கோபமடைந்த டேனியல் க்ரெய்க், “இது ஒரு முட்டாள்தனமான கேள்வி. அவர் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர். அவருடைய பாலினத்தைப் பற்றிப் பேசுவது முட்டாள்தனமானது. ஏன் அவரை நாங்கள் பாண்ட் படத்தில் ஈடுபடுத்தக்கூடாது? இது தான் அந்தக் கேள்விக்கு பதில். இந்தக் கேள்வி எங்கே செல்லும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அத்தகைய உரையாடலில் ஈடுபட எனக்கு விருப்பமில்லை. நீங்கள் என்ன முயற்சிக்கிறீர்கள் என்றும் எனக்குத் தெரியும், அது தவறு, மிக மிகத் தவறு” என்று கடுமையான தொனியில் பதில் கூறினார்.
'நோ டைம் டு டை' படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளில் நடைபெற்று வந்தது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.