

'ஆன்ட் மேன்' திரைப்படத்தின் மூன்றாம் பாகமும், 'ஸ்பைடர்மேன் இன் டு தி வெர்ஸ் அனிமேஷன் படத்தின் இரண்டாம் பாகமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஹீரோ படங்களுக்கு முதலில் புத்துயிர் கொடுத்தது சாம் ரெய்மி இயக்கத்தில் வெளியான 'ஸ்பைடர் மேன்' படங்கள்தான். மார்வலின் சினிமா பிரவேசத்துக்குப் பின் சூப்பர் ஹீரோ படங்களுக்கென தனி அடையாளம் உருவாகிவிட்டது.
தற்போது இந்த இரண்டு தரப்பும், தங்களின் சூப்பர் ஹீரோ படங்களின் அடுத்த பாகத்தை அறிவித்துள்ளன.
2015 ஆம் ஆண்டு 'ஆன்ட் மேன்', 2018 ஆம் ஆண்டு 'ஆன்ட் மேன் அண்ட் தி வாஸ்ப்' என இரண்டு படங்களைத் தொடர்ந்து மூன்றாவது பாகம் தயாராகிறது என மார்வல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பால் ரட் நாயகனாக நடிக்க, முதல் இரண்டு பாகங்களை இயக்கிய பேடன் ரீட் மூன்றாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். 2022 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும் என்று தெரிகிறது.
இன்னொரு பக்கம், 'ஸ்பைடர்மேன் இன் டு தி வெர்ஸ் அனிமேஷன்' படத்தின் சிறப்பான பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் ஆஸ்கர் வெற்றிக்குப் பிறகு, சோனி தரப்பு, 2022-ல் இந்த அனிமேஷன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
'ஸ்பைடர் மேன்' கதாபாத்திரம் மார்வல் படங்களிலும் தோன்றுகிறது என்றாலும், அனிமேஷன் வடிவத்துக்கான உரிமை முழுக்க சோனியிடமே உள்ளது. 'இன் டு தி வெர்ஸ்' படத்துக்கான அனிமேஷன் செய்ய, புது விதமான தொழில்நுட்பத்தையே சோனி அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.