

ஆண்டு 1998, ஜான் கானரை கொல்வதற்காக ஸ்கைநெட் என்ற நிறுவனத்தால் எதிர்காலத்திலிருந்து அனுப்பட்ட டி-1000 என்ற டெர்மினேட்டர் ரோபோவை அழித்து முடித்த நிம்மதியில் தன் மகன் ஜான் கானரோடு கடற்கரையில் இருக்கிறார் சாரா கானர். அப்போது அங்கே வரும் T-800 டெர்மினேட்டர் என்கிற இன்னொரு ரோபாவால் சாரா கானரின் கண்முன்னே சிறுவனான ஜான் கானர் கொடூரமாக கொல்லப்படுகிறார்.
ஆண்டு 2020, மெக்ஸிகோ நாட்டில் வசிக்கும் டேனி என்கிற பெண்ணைக் கொல்வதற்காக Rev-9 என்கிற ஒரு டெர்மினேட்டர் ரோபோவும், அவரை காப்பாற்றுவதற்காக பாதி மனிதன் பாதி ரோபோவான கிரேஸ் என்ற பெண்ணும் எதிர்காலத்திலிருந்து வருகின்றனர். டேனியின் சகோதரனையும், தந்தையையும் கொல்லும் டெர்மினேட்டரிடமிருந்து அவரை காப்பாற்றுகிறார் கிரேஸ். அவர்களுடன் வயதான சாரா கானரும் இணைந்து கொள்கிறார். எதிர்காலத்திலிருந்து வந்திருக்கும் டெர்மினேட்டர் டேனியை கொல்லத் துடிக்கும் காரணம் என்ன? கிரேஸுக்கும் டேனிக்கும் என்ன தொடர்பு? சாரா கானரின் நோக்கம் என்ன? இந்த கேள்விகளுக்கான விடையே ‘டெர்மினேட்டர்: தி டார்க் ஃபேட்’.
1984ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ‘டெர்மினேட்டர்’ படவரிசையில் ஆறாவது படம் இது. எதிர்காலத்தில் மனிதர்களுக்கும், இயந்திரங்களுக்கும் நடக்கவிருக்கும் போரில் மனித குலத்தின் தலைவனாக ஜான் கானர் உருவெடுப்பதை தடுக்க ’ஸ்கைநெட்’ என்ற நிறுவனம் கடந்த காலத்திலேயே அவரைக் கொல்ல முடிவெடுத்து ஒரு கெட்ட ரோபோவை அனுப்பும், அதை தடுக்க எதிர்காலத்திலிருந்து ஒரு நல்ல ரோபோ (அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்) வரும். இதுதான் டெர்மினேட்டர் படங்களின் பொதுவான கதைக்களம்.
இந்த படங்களில் முதல் இரண்டு பாகங்களை தவிர மற்ற எந்த படங்களையும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கவில்லை. அதனாலோ என்னவோ முதல் இரண்டு படங்களின் அளவுக்கு அதன்பிறகு வந்த டெர்மினேட்டர் படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை.
‘டெர்மினேட்டர்: தி டார்க் ஃபேட்’ படத்தில் டெர்மினேட்டரிடமிருந்து டேனியை கிரேஸ் காப்பாற்றும் இடத்தில் தொடங்கும் அதிரடி ஆக்ஷன் படத்தின் இறுதி வரை தொடர்கிறது. ஆனால் அதைத் தாண்டி படத்தில் சொல்லும்படியாக எதுவும் இல்லை என்பது சோகமான உண்மை. தொடர்ந்து ஒரே மாதிரியான ஆக்ஷன் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. டேனியை டெர்மினேட்டர் துரத்துவது, கிரேஸ்/சாரா/அல்லது வேறு யாராவது காப்பாறுவது. இந்த காட்சிகளே படம் முழுக்க திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்கின்றன.
T-800 என்ற ரோபோவாக வழக்கம்போல அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர். இம்முறை வயதான (?) ரோபோவாக குடும்பமும் குடித்தனமுமாக மனைவி மகனோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். தான் ஒரு ரோபோ என்று தனது குடும்பத்தினருக்கு தெரியாது என்றும் கூறுகிறார். இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட கூடவா அவர் ஒரு ரோபோ என்று கண்டுபிடிக்க வாய்ப்பு கிடைத்திருக்காது?. அதற்கு அவர் கூறும் காரணம் காமெடியின் உச்சம்.
படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். முதலில் இந்த கதை எந்த டைம்லைனின் நடக்கிறது? சிறுவனாக இருக்கும்போதே ஜான் கானர் கொல்லப்பட்டுவிட்டால் அதன் பிறகு வெளியான படங்களில் இருந்த ஜான் கானரின் நிலை என்ன? அவை எந்த டைம்லைன்? ரோபோக்களுக்கு வயதாகுமா? இது போன்ற எந்த கேள்விகளுக்கும் படத்தின் பதில் இல்லை.
’டெட்பூல்’ படத்தின் இயக்குநர் டிம் மில்லர், கதை ஜேம்ஸ் கேமரூன், நல்ல கிராபிக்ஸ், விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள், அர்னால்ட் என ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தும் திரைக்கதை என்ற ஒரு வஸ்து இல்லாததால் படத்தோடு எந்த இடத்திலும் ஒன்ற முடியவில்லை.
ஆக்ஷன் பட ரசிகர்கள், அர்னால்டுக்காக மட்டும் படம் பார்க்க விரும்புபவர்கள் இப்படத்தை சென்று காணலாம். அதைத் தாண்டி படத்தை கொண்டாட ஒரு காரணமும் இல்லை.
இதுவரை வெளியான டெர்மினேட்டர் படங்களில் ’டெர்மினேட்டர்: ஜட்ஜ்மெண்ட் டே’ படமே சிறந்த படம் என்ற சிறப்பை இந்த முறையும் சுமந்து நிற்கிறது.