

’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொலைக்காட்சித் தொடரின் தயாரிப்பாளர்களான டேவிட் பெனியாஃப் மற்றும் டி.பி.வெயிஸ் இருவரும் ‘ஸ்டார் வார்ஸ்’ படங்களிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
1991-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் என்பவர் எழுதிய ‘A Song of Ice and Fire’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ டிவி தொடர். இத்தொடரின் முதல் எபிசோட், கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர், 8-வது சீசனோடு கடந்த மே மாதம் 20-ம் தேதி நிறைவடைந்தது.
பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களுடனும் எழுதப்பட்ட திரைக்கதையால், இத்தொடர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது. வெஸ்டரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்ஜியங்களுக்கு இடையே நடக்கும் போர்தான் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மையக்கரு.
இந்நிலையில் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் தயாரிப்பாளர்களான டேவிட் பெனியாஃப் மற்றும் டி.பி.வெயிஸ் ஆகியோரை வைத்து ‘ஸ்டார் வார்ஸ்’ பட வரிசையின் அடுத்த மூன்று பாகங்களை தயாரிக்க டிஸ்னி நிறுவனம் முடிவு செய்திருந்தது. இப்படங்கள் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவித்திருந்தது. இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 18 மாதங்களுக்குப் பிறகு டேவிட் பெனியாஃப் மற்றும் டி.பி.வெயிஸ் இருவரும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் சுமார் 250 மில்லியன் டாலர்கள் மதிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஸ்டார் வார்ஸ் படங்களிலிருந்து டேவிட் பெனியாஃப் மற்றும் டி.பி.வெயிஸ் இருவரும் வெளியாகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “ஒரு நாளைக்கு சில விஷயங்களைத்தான் செய்ய முடியும். எனவே ஒரே நேரத்தில் ‘ஸ்டார் வார்ஸ்’ மற்றும் ’நெட்ஃபிளிக்ஸ்’ இரண்டுக்கும் எங்களால் நியாயம் செய்யமுடியாது என்று நினைத்தோம். எனவே 'ஸ்டார் வார்ஸ்’ படங்களிலிருந்து வருத்தத்துடன் விலகிக் கொள்கிறோம்’ என்றனர்.
டேவிட் பெனியாஃப் மற்றும் டி.பி.வெயிஸ் இருவரது அறிவிப்பால் 'ஸ்டார் வார்ஸ்’ ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.