

நான் கிரெட்டா துன்பெர்க்கின் ரசிகன் என்று ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கூறியுள்ளார்.
காலநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க தனி நபராகப் போராடத் தொடங்கியவர் கிரெட்டா துன்பெர்க். ஸ்வீடனைச் சேர்ந்த இவர் காலநிலை மாற்றம் குறித்து தற்போது உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஐ.நா.வில் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் இந்த 16 வயது சிறுமி பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும், தனது பேச்சில் உலகத் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்திருந்தார் கிரெட்டா. அவரின் பேச்சுக்கு பரவலாகப் பாராட்டும் கிடைத்தது.
கிரெட்டா துன்பெர்க்கைக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ''பிரகாசமான மற்றும் அற்புதமான எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கும் மகிழ்ச்சியான பெண் போல் இவர் இருக்கிறார்” என்று கிண்டலடித்தார்.
இந்நிலையில் ஹாலிவுட் நடிகரும் கலிஃபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், கிரெட்டா துன்பெர்க்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி கிரெட்டாவுக்கு அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஒரு மின்சாரக் காரையும் பரிசளித்துள்ளார்.
தற்போது அர்னால்ட் நடிப்பில் 'டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்' படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. இந்தப் படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அர்னால்ட் பேசும்போது, ''நல்ல கொள்கைகளில் அரசியல் குறுக்கிடுகிறது. நான் கிரெட்டாவின் ரசிகன். அவர் அற்புதமானவர். அவர் ஒரு குழந்தை. 'நீங்கள் சுற்றுச்சூழலை நாசமாக்குவதால் கஷ்டப்படப்போவது எங்கள் தலைமுறைதான்’ என்று இந்தக் குழந்தைகள் கூறுகிறார்கள். இது ஒரு முக்கியமான செய்தி. இதை அரசியல்வாதிகள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்'' என்றார்.
'டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்' படம் வரும் நவம்பர் 1-ம் தேதி அன்று இந்தியாவில் வெளியாகிறது.