

லாஸ் ஏஞ்சலஸ், பிடிஐ
ஹாலிவுட் கிளாசிக் திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ‘ஷாஷேங்க் ரிடெம்ப்ஷன்’ என்ற 1994ம் ஆண்டு ரிலீஸ் ஆனத் திரைப்படம் அதன் தலைப்பினால் வசூல் ரீதியாக பெரிய ஹிட் ஆகவில்லை என்று கூறியுள்ளார் அதில் நாயகனாக நடித்த டிம் ராபின்ஸ். எழுதி இயக்கியவர் பிராங்க் டேரபான்ட்.
நாவலாசிரிய ஸ்டீபன் கிங் எழுதிய 'Rita Hayworth and Shawshank Redemption’, என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாகும் இந்தப் படம். இதில் ஆன்டி டஃப்ரேன் என்ற கதாபாத்திரத்தில் டிம் ராபின்ஸ் நடித்திருந்தார். இந்தக் கதைநாய்கான் டஃப்ரேன் ஒரு பேங்கர், தன் மனைவியையும் அவரது காதலரையும் கொலை செய்ததற்காக ஷாஷேங்க் மாகாண சிறையில் பல ஆண்டுகள் அடைக்கப்படுமாறு தண்டிக்கப்படுகிறார். ஆனால் உண்மையில் இவர் கொலை செய்யவில்லை, சந்தர்ப்ப சாட்சியங்கள் இவருக்கு எதிராக மிகப்பெரிய கொடூரமான தண்டனை இவருக்கு அளிக்கப்படும். இங்கு ரெட் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மோர்கன் ஃப்ரீமன் நட்பு இவருக்கு சிறையில் கிடைக்கிறது.
சிறையில் நடக்கும் கொடூரங்கள், இவர் தான் கொலை செய்யவில்லை என்பதற்கு சுமார் 19 ஆண்டுகள் கழித்து சிறைக்குள் வரும் இளைஞர் ஒருவரின் கதை மூலம் நிரூபணம் கிடைக்கிறது, ஆனால் வார்டனிடம் இதைக் கூறும்போது வார்டன் ஏற்றுக் கொள்ள மாட்டார், இவர் சிறை வார்டனின் ஊழல் புகார்களை அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டுவார் இதனையடுத்து சிறைத்தண்டனைக்குள் தண்டனையாக ஒரு 8க்கு8 வெளிச்சம் புகா தனிமை சிறையில் 2 மாதங்கள் அடைக்க வார்டன் உத்தரவிடுவதோடு இவர் விடுதலையாவதற்குக் கிடைத்த புதிய சாட்சியையும் வார்டன் ‘சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக’ என்கவுண்டரில் கொலை செய்து விடுவார். சிறையில் இருக்கும் கைதிகளை வெளிவேலைக்கு ஒப்பந்தத்தில் அனுப்புவதில் கூலிகளை குறைக்கும் விதத்தில் வார்டன் நிறைய லஞ்சப்பணம் வாங்கும் கடும் ஊழல்வாதியாக இருப்பார், அவரை அம்பலப்படுத்துவதாக கதைப்போக்கு மாறும்.
இத்தகைய விறுவிறுப்பான ஆனால் மன வேதனையளிக்கக் கூடிய ஒரு படத்தை சுவாரஸியமாக எடுத்தும் பாக்ஸ் ஆபீசில் சரிவர வசூல் செய்யவில்லை என்பது இன்றைய இந்தப் படத்தின் ரசிகர்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கும். படத்தின் தலைப்பு சரியாக இல்லை என்பதே வசூல் குறைவுக்குக் காரணம் என்கிறார் நாயகன் டிம் ராபின்ஸ்.
“ஆம், அந்தத் தலைப்புதான், அதை ஒருவரும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு கூறுவதில் நியாயமும் உள்ளது, படம் ரிலீஸ் ஆகி ஆண்டுகள் சென்ற பிறகும் என்னிடம் வரும் ரசிகர்களில் சிலர் என்னிடம், நீங்கள் நடித்த ஸ்க்ரிம்ஷா ரிடக்ஷன் பார்த்தேன், ஷிம்மி ஷிம்மி அல்லது ஷேக்,ஷேங்ஷா என்று பெயரை மாற்றி மாற்றியே கூறி தங்களுக்கு அந்தப் படம் பிடித்திருப்பதாகக் கூறுவார்கள், பல வழிமுறைகளில் மக்கள் அதன் பெயரை தவறாகவே புரிந்து வைத்திருந்தனர்” என்று டிம் ராபின்ஸ் படத்தின் 25 ஆண்டுகள் நிறைவையொட்டி எண்டெர்டெய்ன்மெண்ட் வீக்லி என்ற இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கிரேட் பிலிமின் தாத்பரியம் என்னவெனில் அதன் பெயர் மக்கள் காதுகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருப்பதுதான் என்கிறார் டிம் ராபின்ஸ்.
“நம் வாழ்க்கையில் நம்மை பல்வேறு விஷயங்கள் சிறைப்படுத்தும். சில நேரங்களில் நமக்குப் பிடிக்காத பணியில் நாம் இருக்க நேரிடும், பிடிக்காத வேலையில் இருந்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். சில சமயங்களில் நம்மைக் காயப்படுத்தும் உறவுகளைச் சரி செய்ய முயற்சி செய்வோம், சில வேளைகளில் நாம் பிறக்கும் சூழ்நிலைகளும் நம்மைச் சிறைப்படுத்தும்.
துன்பம் துயரத்திலிருந்து மீண்டு வருதல், கடந்தகால துயர்மிகு அனுபவங்களிலிருந்து மீளுதல் இவையெல்லாமே நம் வாழ்க்கையில் நமக்கு சுதந்திரம் இல்லை என்பதற்கான விஷயமாக மாறுவதுதான், இந்தப் படம் நம்முள் இருக்கும் சுதந்திரத்தை பேசுகிறது. அதாவது சூழ்நிலைக் கைதியாக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வழியில் முறையாக அணுகினால் சுதந்திரம் சாத்தியம் என்பதையே இந்தப் படம் சொல்கிறது. இந்தக் கதைக்கருவும் மக்கள் மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலிப்பதாகும்” என்றா படத்தின் நாயகன் டிம் ராபின்ஸ்.