

லாஸ் ஏஞ்சல்ஸ்
மார்வெல் படங்கள் சினிமா அல்ல என்கிறீர்கள்; ஆனால் திரையரங்குகளில்தானே ஓடுகிறது என்று மார்ட்டின் ஸ்கோர்செஸி, மார்வெல் படங்கள் பற்றி விமர்சனம் செய்ததற்கு மார்வெல் படங்களின் சூப்பர் ஹீரோ நடிகரான ராபர்ட் டவுனி ஜூனியர் பதில் அளித்துள்ளார்.
கடந்த வாரம் புகழ்பெற்ற இயக்கநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி, மார்வெல் படங்கள் சினிமா அல்ல; அவை சாகசங்கள் நிறைந்த ஒரு தீம் பார்க் அனுபவத்தையே தருகின்றன என்று கூறியதற்கு ஹாலிவுட்டில் எதிர்ப்பு உருவானது.
பிரபல மார்வெல் பட இயக்குநர்கள் ஜாஸ் வெட்டோன், ஜேம்ஸ் கன், பீட்டர் ராம்சே மற்றும் நடிகர் சாமுவேல் எல் ஜாக்சன் ஆகியோரும் ஸ்கோர்செஸியின் கருத்துகளுக்குப் பதிலளித்திருந்தனர்.
மார்வல் காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டு பல சூப்பர்ஹீரோ படங்களில் பிரபலமானது 'அயர்ன் மேன்' கதாபாத்திரமே. அயர்ன்மேனாக நடித்திருந்த ராபர்ட் டவுனி ஜூனியர், ஸ்கார்செஸியின் கருத்துக்குப் பதில் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல செயற்கைக்கோள் 'எக்ஸ்எம்' வானொலியான 'தி ஹோவர்ட்டு ஸ்டெர்ன் ஷோ'வுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
"நான் உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்கிறேன். நான் மார்வல் சினிமாடிக் உலகம் இவ்வளவு பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஸ்கார்செஸியின் கருத்து அவருடையது. (மார்வல் படங்கள்) திரையரங்கில் தானே ஓடுகிறது. அவருடைய கருத்தை நான் மதிக்கிறேன். இப்படி பல்வேறு கோணங்கள் தேவை. அப்போதுதான் ஒரு மையப்புள்ளிக்கு வந்து முடிவு செய்துகொண்டு அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்" என்று பதிலளித்துள்ளார்.
அவரது கருத்தை அவமானமாக உணர்கிறீர்களா என்று கேட்டதற்கு, "இந்த ஹாவர்ட் ஸ்டெர்ன் ரேடியோவே இல்லை என்று கூறுவது போலத்தான் அவரது கருத்து இருக்கிறது. அதில் அர்த்தமே இல்லை" என்று கூறினார்.
அவர் இந்த வெற்றியைக் கண்டு பொறாமைப்படுகிறாரா என்று கேட்டபோது, "இல்லை. அவர் மார்டின் ஸ்கார்செஸி. அவர் அப்படிச் சொன்னது அவரது பார்வை. இந்த குறிப்பிட்ட வகையில் எடுக்கப்பட்டும் ஜானர் படங்கள் சினிமா என்ற கலை வடிவத்தை எப்படி இழிவாக்கியது என்பது பற்றியெல்லாம் நிறையப் பேசலாம். பிரச்சினை என்று ஒன்று இருந்தால் அதில் நான் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி. துறைக்குள் அரக்கத்தனமாக வந்து போட்டி அனைத்தையும் இப்படி ஆர்ப்பாட்டமாக ஒழித்துக்கட்டும்போது அது ஆச்சரியமான விஷயமே" என்று கூறி முடித்தார் ராபர்ட்.
பதிலுக்கு மார்வல் படங்களை நினைத்து மார்டின் ஸ்கார்செஸி வருத்தப்படுகிறார் என்று நினைக்கிறீர்களா என்று ராபர்ட் கேட்டதற்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆமாம் என்று பதிலளித்தார்.