

மார்வெல் படங்களில் மீண்டும் ’ஸ்பைடர்மேன்’ கதாபாத்திரம் இடம்பெறும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு சாம் ரெய்மி இயக்கத்தில் ’ஸ்பைடர்மேன்’ திரைப்படம் வெளியானது. அப்போது முதல் ‘ஸ்பைடர்மேன்’ கதாபாத்திரத்தின் உரிமை அப்படத்தை தயாரித்த சோனி நிறுவனத்திடம் இருந்து வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு சோனி நிறுவனத்துக்கும் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை உருவாக்கிய மார்வல் நிறுவனம் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இனி அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்களில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ’கேப்டன் அமெரிக்கா சிவில் வார்’, ’ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்’, ’அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’, ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’, ’ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ ஆகிய படங்களில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டது. இதில் ’ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்’, ’ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ ஆகிய இரு படங்களும் சோனி தயாரிப்பில் வெளியான படங்களிலேயே அதிக வசூலை வாரிக் குவித்த படங்களாகும்.
இந்நிலையில் ஸ்பைடர்மேன் படங்கள் மூலம் கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதம் கேட்கும் மார்வெல் நிறுவனத்தின் கோரிக்கையை சோனி நிறுவனம் ஏற்கவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மார்வெல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபீஜ் சோனி - மார்வெல் கூட்டு தயாரிப்பு உருவாகும் ஸ்பைடர்மேன் படங்களில் இனி தலையிடுவதில்லை என்று விலகினார்.
சமூக வலைதளங்களில் #savespiderman என்ற ஹாஷ்டேகுகள் மூலம் உலக அளவில் இந்த பிரச்சினையை டிரென்ட் செய்தனர் ஸ்பைடமேன் ரசிகர்கள். இனி மார்வெல் படங்களில் ஸ்பைடர்மேனை பார்க்க முடியாது என்ற கவலையில் இருந்த ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
சோனி - மார்வெல் இடையே நடந்த இறுதிகட்ட பேச்சுவார்த்தையுல் உடன்பாடு ஏற்பட்டது. மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இன்னொரு ஸ்பைடர்மேன் படம் வெளியாகவுள்ளதாகவும், அதுவரை மற்ற மார்வெல் படங்களில் ஸ்பைடர்மேனின் கேமியோ இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மார்வெல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபீஜ் கூறியிருப்பதாவது,
ஸ்பைடர்மேனின் பயணம் மார்வெல் சினிமாட்டின் யுனிவர்ஸில் தொடரப்போகிறது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. மார்வெல் ஸ்டூடியோவில் உள்ள அனைவருக்கும் இதில் மகிழ்ச்சியே. ஸ்பைடர்மேன் உலகம் முழுவதும் உள்ள அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒரு சக்திவாய்ந்த ஹீரோ.
சினிமாட்டிக் யுனிவர்ஸ்களை கடக்கக் கூடிய சக்திகளை கொண்ட ஹீரோவாக ஸ்பைடர்மேன் இருக்கிறார். எனவே, சோனி தொடர்ந்து தங்களுடைய சொந்த ஸ்பைடர் யுனிவெர்ஸை உருவாக்குவார்கள், எதிர்காலம் என்ன மாதிரியான ஆச்சர்யங்களை கொண்டுள்ளது என்பது யாருக்கும் தெரியாது”.
இவ்வாறு கெவின் ஃபீஜ் கூறியுள்ளார்.
மார்வெல் படங்களில் மீண்டும் ’ஸ்பைடர்மேன்’ கதாபாத்திரம் இடம்பெறும் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்து வருகின்றனர்.