

'ப்ளாக் விடோ' சூப்பர் ஹீரோ படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் மீண்டும் ஒரு முறை அயர்ன்மேனாக தோன்றவுள்ளார்.
மார்வல் காமிக்ஸ் அச்சிட்ட காலத்தில் எப்படியோ தெரியாது, ஆனால் மார்வல் சூப்பர் ஹீரோ படங்களில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது 'அயர்ன்மேன்' கதாபாத்திரம் தான். அயர்ன்மேனாக நடித்த ராபர்ட் டவுனி ஜூனியருக்கென்றே சர்வதேச அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படத்தில் அயர்ன்மேன் கதாபாத்திரமும், ப்ளாக் விடோ கதாபாத்திரமும் தங்கள் உயிரைத் தியாகம் செய்வதுபோல கதை அமைக்கப்பட்டிருந்தது. இனி மீண்டும் இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் திரையில் பார்க்க முடியாது என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், கடைசியாக ஒரு முறை இந்த இருவரையும் திரையில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு உருவாகியுள்ளது.
'தார்', 'ஹல்க்', 'கேப்டன் அமெரிக்கா', 'அயர்ன்மேன்' என அவெஞ்சர்ஸ் அணியின் மற்ற சூப்பர்ஹீரோக்களை வைத்து தனித்தனிப் படங்கள் வெளியானாலும் 'ப்ளாக் விடோ' படம் பற்றிய யோசனை நீண்ட நாட்களாக கிடப்பிலேயே இருந்தது. தற்போது அதற்கான வேலைகளும் ஆரம்பமாகிவிட்டன. ப்ளாக் விடோவாக ஸ்கார்லெட் ஜொஹான்சனும், அயர்ன்மேனாக ராபர்ட் டவுனி ஜூனியரும் நடிக்கவுள்ளனர்.
'அயர்ன்மேன்' கதாபாத்திரம் எவ்வளவு நிமிடங்கள் திரையில் தோன்றும், கவுரவ வேடமா அல்லது 'ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்' படத்தில் வந்தது போல உறுதுணை கதாபாத்திரமா என்பது இன்னும் தெரியவில்லை.
இந்தக் கதை 'கேப்டன் அமெரிக்கா சிவில் வாரு'க்குப் பிறகு, 'இன்ஃபினிடி வாரு'க்கு முன்பு நடக்கும் கதை போல அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 2020ல் இந்தப் படம் வெளியாகும்.
- ஐஏஎன்எஸ்