

’அவதார்’ படத்தின் அடுத்த பாகங்களை எடுக்க எனக்கு ’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படம் நம்பிக்கை கொடுத்தது என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படம், சர்வதேச அளவில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூலை அள்ளிக் குவித்த 'அவெஞ்சர்ஸ்' வெகுவேகமாக 2 பில்லியல் டாலர் என்ற வசூலைத் தொட்டது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய 'அவதார்' தான் இதுவரை திரைப்பட வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையைக் கொண்டிருந்தது. அந்தப் படம் உலகம் முழுவதும் இதுவரை வசூலித்த தொகை 2.788 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
உலக அளவில் வசூலில் முதலிடத்தில் இருந்த 'அவதார்' படத்தின் வசூலை முறியடித்து $2.789 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படம். இதற்கு 'அவதார்' இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த கேமரூன் 'அவதார்' இரண்டாம் பாகம் குறித்து பல விஷயங்கள் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:
''மக்கள் இன்னும் தியேட்டர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ ஒரு மிகப்பெரிய சாட்சி. 'அவதார்' படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களைத் தொடங்க நான் மிகவும் பயந்து கொண்டிருந்தேன். மார்க்கெட் முன்பு போல இல்லை, மக்களும் முன்பு போல ஒரு இருட்டு அறையில் முன்பின் தெரியாதவர்களோடு அமர்ந்து ஆர்வமாகப் படம் பார்க்கமாட்டார்கள் என்று நம்பினேன். ஆனால் ‘அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம்’ எனக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
ஆனால், அதுபோன்ற ஒரு வெற்றியை 'அவதார்' இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் கொடுக்குமா என்பத் சந்தேகம்தான். ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம். அது நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம். ஆனாலும் அந்த வெற்றி சாத்தியமே என்று இப்போது புரிந்திருக்கிறது''.
இவ்வாறு கேமரூன் கூறியுள்ளார்.
'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் 2021 ஆம் ஆண்டு டிசம்பரிலும், மூன்றாம் பாகம் 2023 டிசம்பரிலும், நான்காம் பாகம் 2024 டிசம்பரிலும், ஐந்தாம் பாகம் 2027 டிசம்பரிலும் வெளியாகிறது.